ADDED : ஜன 24, 2025 07:10 AM

சித்ரதுர்கா: ''வரும் 2028 சட்டசபை தேர்தலிலும் எங்கள் ஆட்சி அமையும்,'' என்று, முதல்வர் சித்தராமையா கூறினார்.
சித்ரதுர்காவில் உள்ள வாணிவிலாஸ் சாகர் அணை நிரம்பி உள்ளதால், அணைக்கு முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் நேற்று பாகினா பூஜை செய்தனர். பின், சித்தராமையா அளித்த பேட்டி:
வாணிவிலாஸ் சாகர் அணை 115 ஆண்டு வரலாறு கொண்டது. ஆனால் இதுவரை மூன்று முறை நிரம்பி உள்ளது. இந்த அணை தண்ணீர் 30,000 ஏக்கர் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. மைசூரு மன்னர் குடும்பத்தினர் ராணி அம்மானி, இந்த அணையை கட்ட தனது நகைகளை விற்று 45 லட்சம் ரூபாய் செலவிட்டார்.
அவரை இந்த நேரத்தில் நினைவு கூர்ந்து நன்றி கூறுகிறோம். எங்கள் அரசு நீர்பாசன திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. சித்ரதுர்காவில் நீர்பாசனத்திற்காக 1,274 கோடி ரூபாய் செலவில் திட்டத்தை தயாரித்து வைத்து உள்ளோம். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் அனைத்து விவசாய நிலங்களுக்கும் தண்ணீர் கிடைக்கும்.
பத்ரா மேலணை திட்டத்திற்கு 5,300 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். முதல்வராக இருந்த பசவராஜ் பொம்மை பத்ரா மேலணை திட்டம் தேசிய திட்டமாக அறிவிக்கப்படும் என்றார். ஆனால் இதுவரை ஒரு ரூபாய் கூட தரவில்லை. பத்ரா மேலணை திட்ட பணிகளை அரசு நிறுத்தவில்லை. ஆனால், வேகமாக நடக்கவில்லை.
நாங்கள் பல முறை டில்லி சென்று பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், அமித்ஷாவை சந்தித்து நிதி ஒதுக்கும்படி கேட்டு விட்டோம்.
ஆனால் அவர்கள் எதுவும் செய்யவில்லை. நபார்டு வங்கியில் இருந்து நமது மாநிலத்திற்கு வர வேண்டிய கடன் அளவை குறைத்து உள்ளனர். இதுபற்றி நிர்மலா சீதாராமனிடம் பேசிய போது கூட, பத்ரா மேலணை திட்டம் பற்றி எடுத்து கூறினேன். வரும் பட்ஜெட்டிலாவது நிதி ஒதுக்க வேண்டும் என்று கடிதம் எழுத உள்ளேன்.
கொடுத்த வாக்குறுதியை முதலில் நிறைவேற்ற வேண்டும். நாங்கள் ஐந்து வாக்குறுதியை நிறைவேற்றினோம். இதனால் மக்கள் நம்பிக்கை பெற்று உள்ளோம். பா.ஜ.,வில் உட்கட்சி பூசல் அதிகரித்து விட்டது. அவர்கள் நான் கோஷ்டியாக உள்ளனர். எங்கள் கட்சியில் எந்த கும்பலும் இல்லை. நானும், சிவகுமாரும் ஒற்றுமையாக இருக்கிறோம். வரும் 2028 சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெறுவோம். எங்கள் ஆட்சி மீண்டும் அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.

