பட்டதாரிகள் 46 ஆயிரம் பேர்; முதுகலை படித்தவர்கள் மட்டும் 6 ஆயிரம் பேர்; கேட்பது துாய்மைப்பணி!
பட்டதாரிகள் 46 ஆயிரம் பேர்; முதுகலை படித்தவர்கள் மட்டும் 6 ஆயிரம் பேர்; கேட்பது துாய்மைப்பணி!
UPDATED : செப் 04, 2024 02:11 PM
ADDED : செப் 04, 2024 01:45 PM

சண்டிகர்: ஹரியானாவில் அரசு தூய்மை பணியாளர் வேலைக்கு 6 ஆயிரம் முதுகலை பட்டதாரிகள், 40 ஆயிரம் இளங்கலை பட்டதாரிகள் உட்பட 4 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
ஹரியானா மாநில அரசு அலுவலகங்களில் குப்பைகளை அகற்றும் தூய்மை பணியாளர் வேலைக்கு ஆட்கள் தேவை என அந்த மாநில அரசு விளம்பரப்படுத்தியது. இந்த வேலையானது, ஒப்பந்த அடிப்படையிலானது; சம்பளம் மாதம் 15 ஆயிரம் ரூபாய். இதற்கு 4 லட்சம் விண்ணப்பங்கள் வந்து குவிந்தன. விண்ணப்பதாரர்களின் கல்வித்தகுதியை பார்த்த அதிகாரிகள் மலைத்துப் போயினர்.
எழுதப்படிக்க தெரிந்தால் மட்டுமே போதுமான இந்த வேலைக்கு விண்ணப்பித்தவர்களில் 6 ஆயிரம் முதுகலை பட்டதாரிகள், 40 ஆயிரம் இளங்கலை பட்டதாரிகள் உள்ளனர். பொறியியல் உள்ளிட்ட படிப்புகளை படித்தோரும் விண்ணப்பம் அனுப்பியுள்ளனர்.
விண்ணப்பம்
இந்த பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் பொது இடங்கள், சாலைகளில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும். விளம்பரத்தில் மொத்தம் எத்தனை காலிப்பணியிடங்கள் என்பது குறித்து எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை. அப்படி இருந்தும் இத்தனை பேர் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர்.
அதிகாரிகள் சொல்வது என்ன?
'மக்கள் தவறுதலாக வேலைக்கு விண்ணப்பிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. தூய்மை பணியாளர் வேலை என தெரிந்தும் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யும் பணி இதுவரை துவங்கவில்லை' என அதிகாரிகள் தெரிவித்தனர்.
'எப்படியோ வேலையில் சேர்ந்து விட்டால் போதும்; அதற்கு பிறகு கல்வித்தகுதியை காரணம் காட்டி ஏதோ ஒரு எழுதும் வேலைக்கு நகர்ந்து விடலாம் என்ற எண்ணத்தில் பலரும் விண்ணப்பித்துள்ளனர்' என்கின்றனர், அதிகாரிகள்.