ADDED : டிச 17, 2024 05:05 AM

உத்தர கன்னடா: பத்மஸ்ரீ விருது பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலரான துளசி கவுடா, நேற்று காலமானார்.
உத்தர கன்னடா மாவட்டம், அங்கோலாவின் ஹொன்னள்ளி கிராமத்தை சேர்ந்த மூதாட்டி துளசி கவுடா, 86. சுற்றுச்சூழல் மீது ஆர்வம் உள்ள இவர், 12 வயதில் இருந்து மரங்களை நட்டு வருகிறார். கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக, 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்களை நட்டுள்ளார்.
வீட்டில் பல கஷ்டங்கள் இருந்தபோதும், சுற்றுச்சூழல் மீது ஆர்வமுடன் இருந்தார். செடி, மரங்கள் அவற்றின் இனம், எந்த செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்ற வேண்டும் உட்பட அனைத்தையும் தெரிந்து வைத்திருந்தார்.
இதனால் இவரை 'விருட்ச மாதா' என்றும்; 'வன களஞ்சியம்' என்றும் அழைக்கின்றனர். இவரின் பணியை பாராட்டி, 2021ல் நாட்டின் உயரிய விருதான 'பத்மஸ்ரீ' விருதை, மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக அவருக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர், வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். நேற்று மாலை அவரது இல்லத்தில் காலமானார். அவரின் மறைவுக்கு, அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.