பஹல்காம் தாக்குதலை திட்டமிட்டது பாக்., ராணுவ தளபதி அசிம் முனீர் இம்ரான் கான் உதவியாளர் 'பகீர்'
பஹல்காம் தாக்குதலை திட்டமிட்டது பாக்., ராணுவ தளபதி அசிம் முனீர் இம்ரான் கான் உதவியாளர் 'பகீர்'
ADDED : டிச 05, 2025 01:07 AM

இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் ராணுவ மோதலை உருவாக்கும் வகையில், பஹல்காம் தாக்குதலை பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் திட்டமிட்டதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் நெருங்கிய உதவியாளர் சல்மான் அகமது குற்றஞ்சாட்டியுள்ளார்.
நம் நாட்டின் ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 26 அப்பாவி சுற்றுலா பயணியர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், பாக்., ராணுவ தளபதி அசிம் முனீரின் நடத்தை மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது குறித்து உரிய விசாரணை நடத்த அமெரிக்க எம்.பி.,க்கள் வலியுறுத்தினர். அந்நாட்டு 42 எம்.பி.,க்கள் அடங்கிய குழு, கையொப்பமிட்ட கடிதம் வெளியுறவுத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் அதிபர் இம்ரான் கானின் நெருங்கிய உதவியாளரும், அமெரிக்க வாழ் பாகிஸ்தானியருமான சல்மான் அகமது கூறியதாவது:
கடந்த 2022 ஏப்ரலில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவி நீக்கம் செய்யப்பட்டதில் இருந்து அந்நாட்டில் ஜனநாயக ரீதியில் செயல்படும் கட்சி தலைவர்களை அந்நாட்டு ராணுவம் முடக்கியது.
அப்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் இருவரின் கீழும் உள்ள அமெரிக்க நிர்வாகத்தை, அமெரிக்கவாழ் பாகிஸ்தான் குழுக்கள் பல ஆண்டுகளாக எச்சரித்து வருகின்றன.
பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர், அந்நாட்டின் ஜனநாயகத்திற்கு மட்டுமல்ல ஆசிய பிராந்தியத்திற்கே மிகவும் ஆபத்தானவர். இதுதவிர, அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் மீதான போர்க்குற்றங்களையும் அமெரிக்க வெளியுறவுக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டி உள்ளோம்.
இதற்கிடையே, இந்தியாவுடன் மோதலை உருவாக் க அசிம் முனீர் முயன்றார். இதற்காக, பஹல்காம் தாக்குதலை அரங்கேற்றி உள்ளார். இதன்மூலம் அவர் புகழ் பெறவும் இந்தியாவுக்கு எதிராக போரை துவங்கவும் அவர் திட்டமிட்டார். எனவே, இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

