ஜம்மு காஷ்மீர் எல்லையில் வட்டமடித்த 6 பாக். ட்ரோன்கள்: உஷாரான இந்திய ராணுவம்
ஜம்மு காஷ்மீர் எல்லையில் வட்டமடித்த 6 பாக். ட்ரோன்கள்: உஷாரான இந்திய ராணுவம்
ADDED : ஆக 26, 2025 07:31 AM

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ட்ரோன்கள் வட்டமிட்டு வேவு பார்த்ததை அடுத்து, இந்திய ராணுவம் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது.
ஜம்முகாஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாகிஸ்தான் 6 ட்ரோன்கள் வட்டமடித்து இருக்கின்றன. குறிப்பாக, மெந்தர் செக்டரில உள்ள பாலகோட் லாங்கோட் மற்றும் குர்சாய்நல்லா பகுதிகளில் இந்த ட்ரோன்கள் நடமாட்டம் கண்டறியப்பட்டு உள்ளது.
இதையடுத்து, எல்லைக் கட்டுபாட்டுக் கோட்டில் ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து ராணுவ உயரதிகாரிகள் கூறி உள்ளதாவது;
ஆளில்லாத இந்த ட்ரோன்கள், அதிக உயரத்தில் சுமார் 5 நிமிடங்களில் ஆங்காங்கே வட்டமடித்துவிட்டு பின்னர் பாகிஸ்தான் திசை நோக்கி திரும்பிச் சென்றுவிட்டன. ஆளில்லாத ட்ரோன்கள் மூலம் இந்திய பகுதியில் ஏதேனும் போதைப்பொருட்கள், வெடிபொருட்கள் உள்ளிட்வற்றை வீசிச் சென்றனவா என்பது குறித்து தேடுதல் வேட்டை நடத்தி வருகிறோம்.
ஆயுதங்கள், போதைப் பொருட்களை வான்வழியாக வீசுவதை தடுக்கும் வகையில் தற்போது முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளோம். எங்களின் கண்காணிப்பு தொடர்கிறது.
இவ்வாறு ராணுவ உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

