பாக்., ராணுவம் திடீர் அத்துமீறல் பதிலடி கொடுத்து முயற்சி முறியடிப்பு
பாக்., ராணுவம் திடீர் அத்துமீறல் பதிலடி கொடுத்து முயற்சி முறியடிப்பு
ADDED : ஏப் 03, 2025 07:05 AM
ஜம்மு : ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில், எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதிக்கு அருகே, கண்ணி வெடி வெடித்ததுடன், பாகிஸ்தான் ராணுவம் திடீரென அத்துமீறி தாக்குதல் நடத்தி ஊடுருவ முயன்றது. அதை நம் ராணுவம் பதிலடி கொடுத்து தடுத்து நிறுத்தியது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானுடன் நீண்ட எல்லையை நாம் பகிர்ந்து கொள்கிறோம். கடந்த, 2021, பிப்., 25ல் எல்லையில் அமைதி நிலவும் வகையில், போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இரு நாட்டு ராணுவத்துக்கு இடையே மோதல் ஏற்படவில்லை. அதே நேரத்தில், பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகள் அவ்வப்போது நடந்தன. கடந்த, பிப்., மாதத்தில் இந்த முயற்சிகள் அதிகமாக இருந்தன.
இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதிக்கு அருகே, நேற்று முன்தினம் திடீரென கண்ணி வெடி வெடித்தது. இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவத்தினர் சரமாரியாக துப்பாக்கியால் சுடத் துவங்கினர்.
இவ்வாறு தாக்குதல் நடத்தியவாறே, நம் எல்லைக்குள் நுழைய முயன்றனர். இதை நம் படையினர் பதிலடி தாக்குதல் நடத்தி தடுத்து நிறுத்தினர். சில மணி நேரத்துக்கு இந்த துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இந்தத் துப்பாக்கிச் சண்டை மற்றும் கண்ணி வெடி வெடித்ததில், பாகிஸ்தான் தரப்பில், ஐந்து வீரர்கள் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கண்ணி வெடி எப்படி வெடித்தது என்பது குறித்தும், பாகிஸ்தான் ராணுவத்தின் திடீர் தாக்குதலுக்கான காரணங்கள் குறித்தும் ராணுவம் ஆராய்ந்து வருகிறது.
எல்லையில் நடக்கும் சிறிய சம்பவங்களை நிறுத்துவது குறித்து, கடந்த, பிப்., மாத இறுதியில், இரு நாட்டு ராணுவத்தின் பிரிகேடியர்கள் நிலையிலான அதிகாரிகள் இடையே பேச்சு நடந்தது. அப்போது அமைதியை நிலைநாட்ட இரு தரப்பும் ஒப்புக் கொண்டன.
இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவம் திடீரென தாக்குதல் நடத்தியதுடன், அத்துமீறி நுழைய முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.

