'இருநாடுகளுக்கு இடையே உறவை விவாதிக்க பாக்., செல்லவில்லை' அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டம்
'இருநாடுகளுக்கு இடையே உறவை விவாதிக்க பாக்., செல்லவில்லை' அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டம்
ADDED : அக் 06, 2024 12:25 AM
புதுடில்லி: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தன் கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேச அழைப்பு விடுத்திருந்த நிலையில், இருநாடுகளுக்கு இடையேயான உறவை விவாதிக்க பாகிஸ்தானுக்கு செல்லவில்லை, என, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
நம் அண்டை நாடான பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில், வரும் 15 மற்றும் 16ம் தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடைபெற உள்ளது. இதில், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையிலான குழு பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பி.டி.ஐ., எனப்படும் பாகிஸ்தான் தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் மீது பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி, சிறையில் அடைத்ததாக கூறி அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இதையொட்டி நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசும்படி, நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில், டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் ஜெய்சங்கரிடம் இதுபற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் கூறியதாவது:
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவு தொடர்பாக விவாதிக்க நான் பாகிஸ்தான் செல்லவில்லை. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினர் நாடு என்ற வகையில், இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளேன்.
மத்திய அரசின் பிரதிநிதியாக அங்கு செல்கிறேன். அதன்படியே என் நடவடிக்கை அமையும். பொதுவாக, இந்த மாநாட்டில் பிரதமர் தான் பங்கேற்பது வழக்கம்.
ஆனால், இந்த மாநாடு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு நம் நாட்டில் நடந்த இந்த மாநாட்டில், பாகிஸ்தான் சார்பில் அவர்களின் வெளியுறவு அமைச்சர் தான் பங்கேற்றார். அதுபோல் நாங்களும் பங்கேற்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.