எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான்; தக்க பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்
எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான்; தக்க பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்
UPDATED : பிப் 13, 2025 01:35 PM
ADDED : பிப் 13, 2025 11:12 AM

பூஞ்ச்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதற்கு, இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில், போர் ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு, இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
நேற்று மாலை பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மேந்தர் பகுதியில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. சுமார் 10 முதல் 15 முறை துப்பாக்கியால் தாக்குதல் நடத்தப்பட்டது. உடனே சுதாரித்துக் கொண்ட இந்திய ராணுவத்தினர், பதிலுக்கு சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்திய ராணுவத்தினரின் இந்த பதில் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த சூழலில் இந்த தாக்குதல் தொடர்பாக ராணுவம் தரப்பில் கூறியதாவது: எல்லையில் எந்தவித தாக்குதல்களிலும் ஈடுபடக் கூடாது என்பதற்காக இந்தியா, பாகிஸ்தான் ராணுவத்தினரிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த சூழலில், இந்திய நிலைfள் மீது ஐ.இ.டி., வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதால் தற்போது எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.
கனரக ஆயுதங்களால் எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை. எல்லையில் இதுபோன்ற சிறு சிறு தாக்குதல்கள் நடப்பது புதிதல்ல. இது தொடர்பாக பாகிஸ்தான் ராணுவத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளன. எல்லையில் இந்திய ராணுவம் தற்போது விழிப்புடன் கண்காணித்து வருகிறது, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

