'பாக்., ராணுவத்தின் அமெரிக்க, சீன போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன' ஆப்பரேஷன் சிந்துார்
'பாக்., ராணுவத்தின் அமெரிக்க, சீன போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன' ஆப்பரேஷன் சிந்துார்
ADDED : அக் 04, 2025 08:02 AM

புதுடில்லி : “ ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையின் போது, பாகிஸ்தான் பயன்படுத்திய அமெரிக்காவின், 'எப் 16' மற்றும் சீனாவி ன், 'ஜே 17 எஸ்' என, 12க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன,” என, நம் விமானப்படை தளபதி ஏ.பி.சிங் தெரிவித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாக்., ஆதரவு பயங்கரவாதிகள் , ஏப்., 22ல் நடத்திய தாக்குதலில், 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
துல்லிய தாக்குதல் இதற்கு பதிலடியாக, மே 7ல், பாகிஸ்தானில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்களை, 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில் நம் படைகள் அழித்தன.
இதில், 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து, இந்தியா - பாக்., இடையே மோதல் வெடித்தது.
நம் படைகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பாக்., கெஞ்சியதை அடுத்து சண்டை முடிவுக்கு வந்தது.
ஆப்பரேஷன் சிந்துாரின் போது, பாகிஸ்தானின் ஆறு போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக, நம் விமானப்படை தளபதி ஏ.பி.சிங் கடந்த ஆகஸ்டில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், டில்லியில் நேற்று, நம் விமானப்படை தளபதி ஏ.பி.சிங் கூறியதாவது:
ஆப்பரேஷன் சிந்துாரின் போது பாக்., ராணுவம் அதிக இழப்புகளை சந்தித்தது. அந்நாட்டு ராணுவம் பயன்படுத்திய அமெரிக்காவின், 'எப் 16' மற்றும் சீனாவின், 'ஜே 17 எஸ்' என, 12க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
மேலும், பாகிஸ்தானின் வான்வழி முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாடு விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதற்கான ஆதாரங்கள் உள்ளன. நம் படைகளின் துல்லிய ஏவுகணை தாக்குதல்கள் மூலம், பாகிஸ்தானின் முக்கிய ராணுவ கட்டமைப்புகள் செயலிழக்க வைக்கப்பட்டன.
நான்கு இடங்களில் ரேடார் அமைப்புகள், இரண்டு இடங்களில் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், இரண்டு இடங்களில் ஓடுபாதைகள் சேதமடைந்தன. மேலும், மூன்று விமான தளங்களில் ஹேங்கர்கள் சேதப்படுத்தப்பட்டன.
ஆதாரம் இது தவிர, தரையில் இருந்து வானுக்கு பாயும் ஏவுகணை அமைப்பும் அழிக்கப்பட்டது. 300 கி.மீட்டருக்கும் அதிகமான தொலைவில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கான ஆதாரம் உள்ளது.
மோதலை தொடர்ந்தால், நம் நாட்டின் தாக்குதல் திறன் மற்றும் ரஷ்யாவின், 'எஸ் - 400' வான் பாதுகாப்பு அமைப்பின் பலம் காரணமாக அதிக இழப்புகளை சந்திக்க நேரிடும் என்பதை உணர்ந்து, போர் நிறுத்தத்துக்கு பாக்., கெஞ்சியது.
இவ்வாறு அவர் கூறினார்.