குழந்தைகள் இறப்புக்கு காரணமான இருமல் மருந்தில் நச்சுத்தன்மை இல்லை என்கிறது மத்திய அரசு தடை விதித்தது தமிழக அரசு
குழந்தைகள் இறப்புக்கு காரணமான இருமல் மருந்தில் நச்சுத்தன்மை இல்லை என்கிறது மத்திய அரசு தடை விதித்தது தமிழக அரசு
ADDED : அக் 04, 2025 08:13 AM

புதுடில்லி: 'மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் குழந்தைகள் இறந்ததற்கு காரணமாக கூறப்படும் இருமல் மருந்தில், சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும் நச்சுக்கள் இல்லை' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. இனி, 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்து பரிந்துரைக்கப்படாது என்றும் அறிவித்துள்ளது.
ம.பி.,யின் சிந்த்வாரா மாவட்டத்தில், கடந்த 15 நாட்களாக, 1 - 6 வயதுக்கு உட்பட்ட , 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பால் இறந்தன. அண்டை மாநிலமான ராஜஸ்தானின் சிகாரிலும், இரண்டு குழந்தைகள் சிறுநீரகங்கள் செயலிழந்து உயிரிழந்தன.
சோதனை இந்தக் குழந்தைகள், 'கோல்ட்ரிப்' மற்றும் 'நெக்ஸ்ட்ரோ' ஆகிய இருமல் மருந்துகளை உட்கொண்டது தெரியவந்தது. இரு மாநிலங்களிலும், இந்த மருந்து உட்பட 15க்கும் மேற்பட்ட மருந்துகள் விற்க தடை விதிக்கப்பட்டது.
குழந்தைகள் இறந்த பகுதிகளுக்கு தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம், தேசிய வைராலஜி நிறுவனம், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் பிற நிறுவனங்களின் நி புணர்கள் விரைந்தனர்.
மருந்து மாதிரிகளை சேகரித்து சோதனை செய்தனர். அதில், சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தும், 'டை எத்திலீன் கிளைகால்' அல்லது 'எத்திலீன் கிளைக்கால்' நச்சுக்கள் இல்லை என்பது தெரியவந்தது.
மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் சுகாதார அதிகாரிகள் நடத்திய சோதனையிலும் இது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மத்திய அரசின் சுகாதார சேவைகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இறந்த குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட இருமல் மருந்து மாதிரிகளை பரிசோதித்ததில், சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தும் நச்சுக்கள் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
விழிப்புணர்வு இனி, 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மற்றும் சளி மருந்து பரிந்துரைக்கப்படாது. இந்த பிரச்னைகள் தானாகவே சரியாகும் என்பதால் ஹைட்ரேஷன் எனப்படும் நீர்ச்சத்து முறை, சரியான ஓய்வு, பராமரிப்பு போன்றவற்றை பெற்றோர் மேற்கொள்ள வேண்டும்.
மருந்து உற்பத்தியாளர் களும், முறையான உற்பத்தி நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். தேவையற்ற மருந்து சேர்க்கையை தவிர்க்க வேண்டும்.
மருந்துகளின் பாதுகாப்பான பயன்பாடு குறித்து பொதுமக்களுக்கு, குறிப்பாக பெற்றோருக்கு விழிப்புணர்வை மருந்து நிறுவனங்கள் ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.