ADDED : அக் 04, 2025 08:14 AM

ஜெய்ப்பூர்: ஒடிஷாவில் இருந்து ராஜஸ்தானுக்கு கன்டெய்னர் லாரியில் கடத்தப்பட்ட 5 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இருவரை கைது செய்தனர்.
ஒடிஷாவில் இருந்து ராஜஸ்தானின் ஷெகாவதிக்கு கன்டெய்னரில் கஞ்சா கடத்துவதாக ராஜஸ்தான் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாநில குண்டர் தடுப்பு போலீசாருடன் இணைந்து ஜுன்ஜுனு மாவட்ட சிறப்பு குழு போலீசார், 'பிரஹார்' என்ற பெயரில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தின் உதய்பூர்வதி பகுதியில் வந்த கன்டெய்னர் லாரியை வழிமறித்து சோதனையிட்டனர். அதில் பதுக்கி வைத்திருந்த 1,014 கிலோ கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து ராஜஸ்தான் போலீஸ் கூடுதல் டி.ஜி.பி., தினேஷ் கூறியதாவது:
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு 5 கோடி ரூபாய். கடத்தல் வலையமைப்பில் தொடர்புடைய சிகார் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் குர்ஜார், பிரமோத் குர்ஜார் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள், ஷேகாவதியைச் சேர்ந்த போதை கடத்தல் கும்பலை சேர்ந்த ராஜு பச்லெங்கி, கோகுல் ஆகியோருக்கு கஞ்சாவை கடத்தி சென்றுள்ளனர் .
இவ்வாறு அவர் தெரிவித்தார்.