இந்தியக்கொடியுடன் பாக்., வீரர்கள்; சொந்த ஊரில் என்னாகுமோ; நெட்டிசன்கள் கவலை!
இந்தியக்கொடியுடன் பாக்., வீரர்கள்; சொந்த ஊரில் என்னாகுமோ; நெட்டிசன்கள் கவலை!
ADDED : செப் 28, 2024 11:24 AM

புதுடில்லி: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா இரட்டை தங்கம் வென்றதை கொண்டாடும் வகையில், இந்திய வீரர்களுடன் இணைந்து பாகிஸ்தான் வீரர்களும் இந்தியாவின் தேசியக் கொடியை ஏந்தி நிற்கும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்டில் நடந்த, 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில், இந்திய ஆண்கள் அணி, ஸ்லோவேனியாவையும், மகளிர் அணி அஜர்பைஜானையும் வீழ்த்தி, இரண்டு தங்க பதக்கங்களை வென்று, முதல் முறையாக வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்திய செஸ் ஒலிம்பியாட் அணி கேப்டன் ஸ்ரீநாத், வீரர் பிக்ஞானந்தா, வீராங்கனை வைஷாலி , குகேஷ் ஆகியோரை மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்திய அணிக்கு, பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், இரண்டு தங்க பதக்கங்களை வென்ற இந்தியாவின் வரலாற்று வெற்றி உலகளவில் மக்கள் இதயத்தில் இடம் பிடித்துள்ளது. கொண்டாட்டத்தின் போது பாகிஸ்தான் அணி வீரர்கள் இந்தியக் கொடியை ஏந்தி நிற்கும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. பிரபலமான செஸ் பிளாட் பார்ம் 'செஸ்பேஸ் இந்தியா' அதிகாரப்பூர்வமான சமூக வலைதள பக்கத்தில், இந்தியா கொடிகளை பாகிஸ்தான் வீரர்கள் ஏந்தி நிற்கும் வீடியோ காட்சிகளை பகிர்ந்து, 'பாகிஸ்தான் செஸ் டீம், செஸ் ஒலிம்பியாட் 2024- டீம் இந்தியா!' என பதிவிட்டுள்ளது.
'பாகிஸ்தான் வீரர்கள் இந்திய கொடியுடன் வீடியோவில் நிற்கும் காட்சியை பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது' என சமூக வலைதளத்தில் ஒருவர் பதிவிட்டுள்ளார். மற்றொரு இணையதள பயனர் ஒருவர்,'நான் வீடியோ காட்சிகளை பார்க்க விரும்புகிறேன்'என பதிவிட்டுள்ளார்.
இது குறித்து சமூகவலைதளத்தில் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 'சொந்த ஊருக்கு போனால் அவர்களுக்கு என்ன கதியோ' என்றும் கவலை தெரிவித்து நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.