திருமணம் செய்ய விரும்பிய பாகிஸ்தான் பெண்; நாட்டையே வரதட்சணையாக கேட்டார் வாஜ்பாய்
திருமணம் செய்ய விரும்பிய பாகிஸ்தான் பெண்; நாட்டையே வரதட்சணையாக கேட்டார் வாஜ்பாய்
ADDED : டிச 26, 2025 02:33 AM

லக்னோ: “தன்னை திருமணம் செய்ய விரும்பிய பாகிஸ்தான் பெண்ணிடம், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அந்நாட்டையே வரதட்சணையாக கேட்டார்,” என, நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்து உள்ளார்.
பா.ஜ.,வைச் சேர்ந்த மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 101வது பிறந்த நாள், நாடு முழுதும் நேற்று கொண்டாடப்பட்டது.
நகைச்சுவை உணர்வு
அவரை நினைவுகூரும் வகையில், உத்தர பிரதேசத்தின் லக்னோவில் கவிதை வாசிப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், வாஜ்பாயுடன் நெருக்கமாக பழகிய மூத்த பா.ஜ., நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், வாஜ்பாய் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசியதாவது: முன்னாள் பிரதமர் வாஜ்பாயிடம் சிறந்த நிர்வாக திறன் இருந்தது அனைவரும் அறிந்ததே. அவரது குறும்புத்தனத்தையும், நகைச்சுவை உணர்வையும் அவருடன் நெருக்கமாக இருந்தவர்கள் மட்டுமே அறிவர்.
நிபந்தனை
அணு ஆயுத சோதனைக்கு பின், இந்தியாவுக்கும், நம் அண்டை நா டான பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதை சரிசெய்யும் வகையில், இரு நாடுகளுக்கு இடையே லாகூர் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, 1999ல் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட தலைவர்களும், பாகிஸ்தான் தலைவர்களும், டில்லியில் இருந்து பாகிஸ்தானின் லாகூருக்கு பஸ்சில் சென்றனர்.
பயணத்தின் போதே வாஜ்பாய் அனைவருடன் உரையாடியபடியே வந்தார். அப்போது, அவரது பேச்சால் ஈர்க்கப்பட்ட பாகிஸ்தான் பெண் ஒருவர், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வாஜ்பாயிடம் கேட்டார்; அதற்கு வரதட்சணையாக காஷ்மீரை தர வேண்டும் என, நிபந்தனை விதித்தார்.
இதற்கு சிரித்துக் கொண்டே பதிலளித்த வாஜ்பாய், 'உங்களை திருமணம் செய்து கொள்ள தயார்; அதற்கு வரதட்சணையாக பாகிஸ்தான் முழுதையும் தர வேண்டும்; சம்மதமா' என, கேட்டார்.
இந்த பதிலில், வாஜ்பாயின் நகைச்சுவை உணர்வு மட்டும் வெளிப்படவில்லை; நம் நாட்டின் ஒரு பகுதியாக உள்ள காஷ்மீரை விட்டுக் கொடுக்காமல் இருப்பதில், அசைக்க முடியாத நிலைப்பாட்டை அவர் கொண்டிருந்தார் என்பதையும் இது காட்டுகிறது.
அதே போல், அரசியல் கட்சி தலைவர்களை விமர்சிக்கும் போதும், கண்ணியமான முறையிலேயே அவர் விமர்சித்தார். ஒருமுறை கூட எல்லை தாண்டி பேசியதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

