பாலக்காட்டில் களைகிறது காங்., கட்சியின் கூடாரம்! வேட்பாளர் தேர்வில் அதிருப்தி
பாலக்காட்டில் களைகிறது காங்., கட்சியின் கூடாரம்! வேட்பாளர் தேர்வில் அதிருப்தி
ADDED : அக் 17, 2024 11:27 PM

பாலக்காடு : கேரள மாநிலம், பாலக்காடு சட்டசபை தொகுதி காங்., எம்.எல்.ஏ., ஷாபி பரப்பில், லோக்சபா தேர்தலில் வடகரை தொகுதி எம்.பி.,யானார். இதையடுத்து வரும், நவ,, 13ம் தேதி பாலக்காடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் நடக்கிறது.
இடைத்தேர்தலில் போட்டியிட, காங்., வேட்பாளராக ராகுல் மாங்கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பாளர் தேர்வில் காட்சிக்குள் புகைச்சல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காங்., கட்சியின் சமூக ஊடகப் பிரிவு கன்வினர் சரின், நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது, காங்., கட்சியில் இருந்து விலகி, மா.கம்யூ., கட்சியில் இணைந்து செயல்பட போவதாக அறிவித்தார். அதற்கு, மா.கம்யூ., கட்சியினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
சரின் கூறியதாவது:
மா.கம்யூ., தலைமையிலான இடது ஜனநாயக கூட்டணியுடன் சேர்ந்து செயல்பட முடிவெடுத்துள்ளேன். மா. கம்யூ., கட்சி இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கினால், அதற்கு தயாராக உள்ளேன். தற்போது, யாருடன் சேர்ந்து நிற்க வேண்டும் என்பது நன்றாக புரிந்து விட்டது. காங்., கட்சிக்கு இனி திரும்பி செல்ல மாட்டேன்.
லோக்சபா தேர்தலில் தோல்வி கண்டபோது, இடதுசாரி கட்சியினர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால், காங்., கட்சியில் அதுபோன்று எவ்வித நடவடிக்கையும் இல்லை. இவ்வகையில், ஒரு திடமான கட்சியாக மா.கம்யூ., உள்ளது. காங்., கட்சியில், பல்ராம், தங்கப்பன் போன்ற பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர்களை வேட்பாளராக தேர்வு செய்யவில்லை. யாரை திருப்திபடுத்த ராகுல் மாங்கூட்டத்தை வேட்பாளராக தேர்வு செய்தனர் என, தெரியவில்லை. காங்., கட்சிக்குள் கோஷ்டி பூசல் இருப்பது எல்லோருக்கும் தெரியும்.
கேரளாவில், பா.ஜ.,வை எதிர்கொள்ளும் சக்தி காங்., கட்சியில் இல்லை. மக்களிடையே இறங்கி செல்ல முடிவு செய்துள்ளேன். அரசியல் வேறுபாடின்றி பாலக்காடு நகராட்சியில் உள்ள அனைத்து கவுன்சிலர்களையும் சந்தித்து பேசவுள்ளேன்.
இவ்வாறு, அவர் கூறினார்.