ADDED : செப் 19, 2024 04:00 AM
ரத்லம்: மத்தியப் பிரதேசத்தில் மிலாடி நபி ஊர்வலத்தின் போது பாலஸ்தீனக் கொடியை ஏந்தி வந்த நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை குறிவைத்து காசாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் அப்பாவி மக்களும் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில், செப். 16ல் மத்திய பிரதேசத்தின் ரத்லமில் மிலாடி நபியை முன்னிட்டு முஸ்லிம்கள் ஊர்வலமாக சென்றனர். அந்த ஊர்வலத்தில் சிலர் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டு கொடிகளை ஏந்தி வந்தனர். இது குறித்து சஞ்சய் பதிதார் என்பவர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல் மத்திய பிரதேசத்தின் பாலாகாட் மற்றும் மண்டலா மாவட்டங்களில் நடந்த மிலாடி நபி ஊர்வலத்திலும் சிலர் பாலஸ்தீன கொடிகளை காட்டினர்.
இது தொடர்பாக சிறுவன் உட்பட நான்கு பேரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவை பார்த்து நடவடிக்கை எடுத்ததாக கூறியுள்ளனர்.