ஊராட்சி தலைவர் தேர்தல்; தேவி வெற்றி செல்லும்: கோர்ட்
ஊராட்சி தலைவர் தேர்தல்; தேவி வெற்றி செல்லும்: கோர்ட்
ADDED : டிச 20, 2024 06:24 AM

புதுடில்லி : காரைக்குடி சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் தேவி என்பவர் வெற்றி பெற்றது செல்லும் என, உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், 'தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் கொடுக்கப்பட்ட பின், மீண்டும் ஓட்டு எண்ணிக்கை நடத்த தேர்தல் ஆணையத்துக்கோ, தேர்தல் நடத்தும் அதிகாரிக்கோ எந்த அதிகாரமும் கிடையாது' என, தீர்ப்பளித்துள்ளது.
காரைக்குடி சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில், காரைக்குடி தொகுதி காங்., - எம்.எல்.ஏ., மாங்குடியின் மனைவி தேவி போட்டியிட்டார். அவருக்கு எதிராக பிரியதர்ஷினி என்பவரும் போட்டியிட்டார்.
இதில், தேவி வெற்றி பெற்றதாக சான்றிதழ் வழங்கப்பட்டது. பின், மீண்டும் ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு, மற்றொரு வேட்பாளரான பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இது விதிமுறைகளுக்கு எதிரானது எனக் கூறி, முதலில் வெற்றி பெற்றவர் என அறிவிக்கப்பட்டு சான்றிதழ் பெற்ற தேவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதில், அவருக்கு சாதகமாகவே உத்தரவு வந்திருந்தது.
உச்ச நீதிமன்றத்தில் பிரியதர்ஷினி மேல்முறையீடு செய்த நிலையில், மீண்டும் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவு வழங்கியிருந்தது.
இதன்பின், இந்த வழக்கு விசாரணை பல நீதிமன்றங்களில் மாறி மாறி நடைபெற்ற நிலையில், இறுதியாக பிரியதர்ஷினி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் அரவிந்த் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, நேற்று முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தது.
உத்தரவில் நீதிபதிகள் கூறியதாவது:
ஓட்டு எண்ணிக்கை முடிந்து அதற்கான வெற்றிச் சான்றிதழ் வழங்கப்பட்ட பின், மறுஓட்டு எண்ணிக்கை நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்திற்கோ, தேர்தல் நடத்தும் அதிகாரிக்கோ எந்தவிதமான அதிகாரமும் கிடையாது.
இந்த விவகாரத்தில், சங்கராபுரம் ஊராட்சி மன்ற தேர்தலில் தேவியின் வெற்றி உறுதி செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை முடித்து வைத்தனர்.