ADDED : ஜன 01, 2025 01:09 AM
புனே, மஹாராஷ்டிராவில் கிராம பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கில், அம்மாநில அமைச்சர் தனஞ்செய் முண்டேவின் நெருங்கிய உதவியாளர் நேற்று போலீசிடம் சரணடைந்தார்.
மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., - சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு உள்ள பீடு மாவட்டம், மஸ்ஜோக் கிராம பஞ்சாயத்து தலைவராக இருந்தவர் சந்தோஷ் தேஷ்முக். இவரை கடந்த மாதம் மர்ம நபர்கள் கடத்திச் சென்று கொலை செய்தனர்.
இது குறித்து போலீசார் நான்கு பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், பீடு மாவட்டத்தில் உள்ள காற்றாலை நிறுவன அதிபரை ஒரு கும்பல் பணம் கேட்டு மிரட்டியுள்ளது.
அவர்களை பஞ்சாயத்து தலைவர் சந்தோஷ் தேஷ்முக் எச்சரித்துள்ளார். இதனால் கொலை நடந்தது தெரியவந்தது.
காற்றாலை நிறுவன அதிபரை பணம் கேட்டு மிரட்டிய வழக்கில், தேசிய வாத காங்கிரசைச் சேர்ந்த மஹாராஷ்டிரா பொது வினியோகத் துறை அமைச்சர்  தனஞ்செய் முண்டேவின் நெருங்கிய உதவியாளர் வால்மிக் காரத் போலீசால் தேடப்பட்டு வந்தார்.
அவருக்கும், பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி, பீடு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து அமைச்சரின் உதவியாளர் வால்மிக் காரத் நேற்று காலை புனேவில் உள்ள சி.ஐ.டி., போலீஸ் அலுவலகத்தில் சரணடைந்தார்.
அதற்கு முன் சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்ட வீடியோவில், 'பஞ்சாயத்து தலைவர் சந்தோஷ் தேஷ்முக்கை கொலை செய்தவர்களை துாக்கில் போட வேண்டும்.
'அவரின் கொலை வழக்கில் அரசியல் பழிவாங்கும் முயற்சியாக, என் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. அதனால் சரணடைந்தேன்' என  கூறியுள்ளார்.
'பொய் வழக்கு என்றால் 20 நாட்களாக ஏன் தலைமறைவாக இருக்க வேண்டும், உடனே அவர் சரணடைந்திருக்கலாமே' என எதிர்க்கட்சியினர் விமர்சித்துள்ளனர்.

