ADDED : டிச 18, 2024 12:51 AM
கொச்சி, கேரளாவில் யானை தாக்கியதில், 40 வயதான நபர் பலியானார். இது, பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் சமீப காலமாக வன விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவை தேடி ஊருக்குள் வருவதும், குடியிருப்புகளை சேதப்படுத்துவதும் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில், எர்ணாகுளம் மாவட்டத்தின் குட்டாம்புழா கிராமம், வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு, நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து யானை ஒன்று ஊருக்குள் நுழைந்தது.
அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த எல்டோஸ், 40, என்பவர் அவ்வழியாக சென்றபோது யானை அவரை தாக்கியது.
இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், எல்டோசின் உடலை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர்.
வனவிலங்குகளால் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதை தடுக்கக்கோரி, போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த மாவட்ட கலெக்டர், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு நடத்தினார். வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உயிரிழந்த எல்டோசின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு பெற்று தருவதாகவும் கலெக்டர் உறுதி அளித்தார்.
இதையடுத்து, தங்களின் போராட்டத்தை கிராம மக்கள் வாபஸ் பெற்றனர். இதற்கிடையே, வனப்பகுதியில் இருந்து விலங்குகள், கிராமப் பகுதிக்குள் நுழையாமல் தடுக்கும் வகையில், ஆங்காங்கே குழிகளை வனப்பகுதியினர் தோண்டி வருகின்றனர்.