விசாரணைக்கு தடை விதிக்க முடியாது பன்னீர்செல்வத்தின் மனு தள்ளுபடி
விசாரணைக்கு தடை விதிக்க முடியாது பன்னீர்செல்வத்தின் மனு தள்ளுபடி
ADDED : மார் 01, 2024 11:52 PM
புதுடில்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழகத்தில், 2001 - 06 வரையிலான அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் சில மாதங்கள் முதல்வராகவும் மற்றும் அமைச்சராகவும் பதவி வகித்த பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர், முறைகேடான அளவுக்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில், 2012-ல் துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீதான புகாரை திரும்பப் பெறுவதாக தெரிவித்தனர்.
இதன்படி, பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை வழக்கில் இருந்து விடுவித்து, அதே ஆண்டு டிசம்பரில் சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார்.
இதை எதிர்த்து, பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஹிருஷிகேஷ் ராய், பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கின் தன்மை, தகுதியின் அடிப்படையிலேயே தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்குகளை விசாரிப்பதாகவும், இதில் தலையிட விரும்பவில்லை எனவும் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

