ADDED : ஜன 29, 2025 08:13 PM

மாலத்தீவு, லட்சத்தீவுகளுக்கு சென்று வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுபவர்களை பார்த்து, நமக்கும் தீவுகளுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை ஏற்படும். ஆனால் செலவு அதிகமாகும் என்பதால் பெரும்பாலானோர் தீவுகளுக்கு சுற்றுலா செல்லும் முடிவில் இருந்து பின்வாங்கி விடுவர்.
மாலத்தீவு, லட்ச தீவுகளுக்கு தான் சுற்றுலா செல்ல வேண்டும் என்று இல்லை. கர்நாடகாவில் கடலோர மாவட்டங்களிலும் சில குட்டி தீவுகள் உள்ளன. இங்கேயும் நாம் சுற்றுலா செல்லலாம். உடுப்பியில் உள்ள ஒரு தீவு பற்றி நாம் பார்க்கலாம்.
உடுப்பியின் மல்பே கடற்கரையில் இருந்து 6 கடல் மைல் துாரத்தில் உள்ளது செயின்ட் மேரீஸ் தீவு. இந்த தீவுக்கு தோன்சேபர் என்ற பெயரும் உண்டு.
தீவின் மணற்பரப்பில் ஏராளமான தென்னை மரங்கள் உள்ளன. இதனால் தீவு குளுகுளுப்பாக இருக்கும். தீவுக்கு செல்பவர்கள் மரங்களின் அடியில் அமர்ந்து இளநீர், குளிர்பானங்களை குடித்து கடலின் அழகை ரசிக்கின்றனர்.
தீவின் அருகில் படகில் செல்லும் போது வெயிலின் தாக்கம் இருக்கும் என்பதால், தண்ணீர் பாட்டில்கள் எடுத்து செல்வதும், கூலிங் கிளாஸ் அணிந்து செல்வதும் நல்லது. மல்பே கடற்கரையில் இருந்து தீவுக்கு படகுகள் இயக்கப்படுகின்றன. சீசனைப் பொறுத்து கட்டணம் மாறுபடும்.
இந்த தீவுக்கு செல்பவர்கள் பூலோக சொர்க்கம் என்று வர்ணிப்பது வழக்கம். தீவில் ஒரு குறிப்பிட்ட இடங்களில் மட்டும், சுற்றுலா பயணியர் குளிக்கவும், நீர்சாகச விளையாட்டுகளில் ஈடுபடவும் அனுமதிக்கப்படுகின்றனர். அங்கு இருக்கும் காவலாளிகள், சுற்றுலா பயணியரை கவனித்து கொண்டு இருப்பர்.
கடந்த 1498ல் இந்தியாவுக்கான கடல் வழியை கண்டுபிடித்தவுடன் வாஸ்கோடகாமா இந்த தீவில் தரையிறங்கினார் என்றும், கோழிக்கோடு செல்வதற்கு முன்பு இங்கு புனித மேரிக்கு ஒரு சிலையை அர்ப்பணித்தார் என்றும், இதனால் தீவுக்கு செயின்ட் மேரீஸ் பெயர் வந்ததாகவும் வரலாறுகள் கூறுகின்றன.
- -நமது நிருபர் - -

