ADDED : நவ 25, 2025 01:18 AM

புதுடில்லி: தற்கொலை செய்து கொண்ட பத்தாம் வகுப்பு மாணவனை உளவியல் ரீதியாக துன்புறுத்திய ஆசிரியர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பள்ளி முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுடில்லி செயின்ட் கொலம்பா பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த மாணவர், 18ம் தேதி மதியம் 2:30 மணிக்கு ராஜேந்திரா பிளேஸ் மெட்ரோ ரயில் நிலையத்தின் இரண்டாம் தள நடைமேடையில் இருந்து குதித்து தற் கொலை செய்து கொண்டார்.
அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், தன்னை மனரீதியாக துன்புறுத்திய ஆசிரியர்களின் பெயர்களையும் எழுதி வைத்திருந்தார்.
இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், தலைமை ஆசிரியர் உட்பட நான்கு ஆசிரியர்களை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.
மாணவன் தற்கொலைக்கு காரணமாக ஆசிரியர்களை கைது செய்ய வலியுறுத்தி, பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஜந்தர் மந்தரில் நேற்று முன் தினம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில், செயின்ட் கொலம்பியா பள்ளி முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை கைது செய்ய வலியுறுத்தி கோஷமிட்டனர்.
ஒரே மகனை இழந்த தாய் ரீமா சர்மா கூறியதாவது:
பள்ளிகளில் நடக்கும் இதுபோன்ற சம்பவங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. பள்ளி மாணவர்கள் மிகவும் கடினமான கட்டத்தை கடந்து செல்கின்றனர். இந்த வயதில் அவர்கள் மிக எளிதாக மன ரீதியாகப் பாதிக்கப்படுவர்.
என் மகன் விவகாரத்தில் பாரபட்சம் இன்றி விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டால்தான் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தப் போராட்டத்தில், மற்ற மாணவர்களின் பெற்றோரும் பங்கேற்று, பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக கோஷமிட்டனர்.
தற்கொலை செய்து கொண்ட மாணவன் இதுவரை பல்வேறு போட்டிகளில் வாங்கிய பதக்கங்கள், சான்றிதழ்கள் போராட்டம் நடந்த இடத்தில் வைக்கப்பட்டு இருந்தன. ஏராளமானோர் அதற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.
மேலும் 3 ஆசிரியர்கள் விசாரணைக்கு அழைப்பு
செயின்ட் கொலம்பியா பள்ளியின் மூன்று ஆசிரியர்களுக்கு, போலீசார் நேற்று முன் தினம் சம்மன் வழங்கினர். அதில், இரு ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பள்ளியில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். மாணவர் தற்கொலை செய்து கொண்ட போது அவனுடன் இருந்த சக மாணவர்களிடம் ஏற்கனவே வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், விசாரணைக்கு ஆஜராகுமாறு மேலும் மூன்று ஆசிரியர்களுக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பள்ளியின் ஊழியர்கள் விசாரிக்கப்படுவர் என போலீசார் கூறினர்.

