6 வயது சிறுவனின் காதை துண்டாக்கிய 'பிட்புல்' நாய் வளர்த்தவர் கைது
6 வயது சிறுவனின் காதை துண்டாக்கிய 'பிட்புல்' நாய் வளர்த்தவர் கைது
ADDED : நவ 25, 2025 01:19 AM
புதுடில்லி: ஆறு வயது சிறுவனைக் கடித்து வலது காதை துண்டாக்கிய 'பிட்புல்' நாயை வளர்த்தவர் கைது செய்யப்பட்டார்.
வடமேற்கு டில்லி பிரேம் நகரில் வசிப்பவர் ராஜேஷ் பால். இவர், பிட்பில் என்ற ஆக்ரோஷமான நாய் வளர்க்கிறார். நேற்று முன் தினம் மாலை, பக்கத்து வீட்டில் வசிக்கும் தினேஷ் என்பவரின் ஆறு வயது சிறுவன், வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது, ராஜேஷ் பால் வீட்டுக்குள் இருந்து வந்த பிட்புல் நாய், சிறுவன் மீது ஆக்ரோஷமாக பாய்ந்து கடித்துக் குதறியது. சிறுவனின் காதைக் கடித்து எடுத்துக் கொண்டு ஓடியது.
சிறுவனின் அலறல் கேட்டு வீட்டுக்குள் இருந்த பெற்றோர் ஓடி வந்தனர். ரோஹிணி பி.எஸ்.ஏ., மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். முதலுதவி செய்து சப்தர்ஜங் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பிரேம் நகர் போலீசார், ராஜேஷ் பாலை கைது செய்தனர். தன் மகன் சச்சின் பால், கொலை முயற்சி வழக்கில் ஒன்றரை ஆண்டுக்கு முன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
எனவே, அவர் வீட்டில் இருந்த பிட்புல் நாயை கொண்டு வந்து பராமரிப்பதாக ராஜேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

