கூடியது பார்லிமென்ட்; லோக்சபாவில் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் வெளிநடப்பு
கூடியது பார்லிமென்ட்; லோக்சபாவில் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் வெளிநடப்பு
ADDED : டிச 03, 2024 12:09 PM

புதுடில்லி: அதானி விவகாரம், தமிழகத்தில் பெஞ்சல் புயல் பாதிப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க அனுமதி அளிக்காததால், இண்டியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ம் தேதி துவங்கியது. கூட்டம் துவங்கி முதல் நாளில் இருந்து, எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (டிச.,03) காலை 11 மணிக்கு இரு அவைகளும் கூடின. லோக்சபாவில், அதானி விவகாரம், தமிழகத்தில் பெஞ்சல் புயல் பாதிப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க கோரி, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கோஷம் எழுப்பினர்.
ஆனால், சபாநாயகர் ஓம்பிர்லா அனுமதி தராத காரணத்தினால், இண்டியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர். ராஜ்யசபாவில் தமிழக எம்.பி.,க்கள் தமிழகத்தில் பெஞ்சல் புயல் பாதிப்புகள் குறித்து பேசினர். தமிழக எம்.பி., வைகோ பேசியதாவது: புயல் மழை காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். பாதிப்புகளை கணக்கிட உடனடியாக உள்துறை அமைச்சகம் குழுவை அனுப்ப வேண்டும்.
பெஞ்சல் புயலின் தாக்கத்தால் தமிழகத்தின் பல பகுதிகளில் பல ஏக்கரில் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல ஏக்கரில் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. புயல், மழை பாதிப்புகளுக்கு மத்திய அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.