அதிவேக பாய்ச்சலில் இந்திய பொருளாதாரம்: பார்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை
அதிவேக பாய்ச்சலில் இந்திய பொருளாதாரம்: பார்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை
UPDATED : ஜன 28, 2026 01:11 PM
ADDED : ஜன 28, 2026 11:39 AM

புதுடில்லி: உலகளவில் பொருளாதார சிக்கல் இருந்தாலும் இந்தியாவின் பொருளாதாரம் வலுவாக உள்ளது. இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்கிறது என ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11மணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. ஜனாதிபதி உரை பின்வருமாறு:
* உலகளாவிய நெல் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கடந்தாண்டு 350 மில்லியன் டன் உணவுப்பொருள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
* உலகளவில் பொருளாதார சிக்கல் இருந்தாலும் இந்தியாவின் பொருளாதாரம் வலுவாக உள்ளது. இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்கிறது.
* கடந்த 10 ஆண்டுகளில் ஏழை மக்களுக்கு 4 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. உஜ்வாலா திட்டத்தின் கீழ் 2 கோடி மக்களுக்கு காஸ் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
* பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களின் வளரச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
* ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் மக்களின் வீடுகளுக்கு அருகே மருத்துவ வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.
* மின்வாகன உற்பத்தியில் இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் உள்ள கிராமங்களை நெடுஞ்சாலைகள் மூலம் இணைத்துள்ளோம்.
* உலகின் 3வது பெரிய மெட்ரோ நெட்வோர்க் கொண்ட நாடு இந்தியா.
* 2025ல் 2 கோடிக்கு மேல் இருசக்கர வாகன பதிவு நடந்துள்ளது.
* ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது
* இந்தியாவில் டிஜிட்டல் மற்றும் ஏஐயில் முதலீடு அதிகரித்துள்ளது.
* அசாமில் செமி கண்டக்டர் ஆலை பணிகள் தீவிரமாக நடக்கின்றன.
* அருணாச்சல், திரிபுரா, மிசோரம் மாநில தலைநகரங்கள் அகல ரயில் பாதையுடன் இணைக்கப்பட்டு உள்ளது.
* நாட்டில் பின்தங்கிய மக்களை முன்னேற்றுவதே அரசின் நோக்கம் ஆகும்.
* கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். பல்வேறு துறைகளில் நாடு புதிய உச்சத்தை எட்டி உள்ளது.
* ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் 12.5 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு கிடைத்துள்ளது.
* ஏழை நோயாளிகளுக்காகத் தொடங்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், இதுவரை நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 11 கோடிக்கும் மேற்பட்ட இலவச சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஓராண்டில் மட்டும், இந்தத் திட்டத்தின் கீழ் 2.5 கோடி ஏழைப் பயனாளிகள் இலவச சிகிச்சை பெற்றுள்ளனர்.
* ஒவ்வொரு குடிமகனுக்கும் காப்பீட்டுப் பாதுகாப்பை வழங்குவதில் அரசு உறுதியாக உள்ளது. கோடிக்கணக்கான ஏழை குடிமக்கள் காப்பீட்டுப் பாதுகாப்பு பெற்றுள்ளனர். ரூ.24,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள இழப்பீட்டுத் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன.
* 2025ம் ஆண்டில் இந்தியாவின் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி ரூ.1.5 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதியும் ரூ.23 ஆயிரம் கோடியை தாண்டியுள்ளது.
* ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை வெற்றிக்கு பிறகு, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு தளவாடங்கள் மீதான நம்பிக்கை வலுவடைந்துள்ளது.
* ஆப்பரேஷன் சிந்தூர் மூலம் இந்திய பாதுகாப்பு படை வீரர்களின் துணிச்சலையும், வீரத்தையும் உலகம் கண்டது.
*எந்தவொரு பயங்கரவாத செயலுக்கும் இந்தியா தக்க நடவடிக்கை மூலம் பதிலடி கொடுக்கும்.
* உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பின் படி, கண் பாதிப்பு நோய் இல்லாத நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
* இந்தியா மிக விரைவில் நக்சல் பிடியில் இருந்து வெளிவரும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தீவிரம் அடைந்துள்ளன.
இவ்வாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசினார்.
பிப்ரவரி 1ல் பட்ஜெட்
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் முதற்கட்ட அமர்வு, பிப்., 13 வரை நடக்கவுள்ள நிலையில், இரண்டாம் கட்ட அமர்வு, மார்ச் 9ல் துவங்கி, ஏப்., 2 வரை நடக்கிறது. வரும் 2026 - 27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான நிர்மலா சீதாராமன், பிப்., 1ல் தாக்கல் செய்கிறார்.

