தொடர்ந்து முடங்கி வரும் பார்லிமென்ட்; எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைப்பு
தொடர்ந்து முடங்கி வரும் பார்லிமென்ட்; எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைப்பு
UPDATED : ஆக 11, 2025 12:22 PM
ADDED : ஆக 11, 2025 11:59 AM

புதுடில்லி: பீஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், பார்லிமென்டின் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 21ம் தேதி தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 21ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறுகிறது. கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற, மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளது.லோக்சபா, ராஜ்யசபாவில் அலுவல்கள் நடக்காமல் முடங்கி வருகிறது.
எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் இறங்கி ரகளையில் ஈடுபட்டதால், கேள்வி நேரம் உள்ளிட்ட அலுவல்கள் முற்றிலுமாக வீணாகின. இந்நிலையில் 16 வது நாளான இன்று ( ஆகஸ்ட் 11 ) பார்லிமென்ட் இரு அவைகளும் வழக்கம்போல் கூடின.லோக்சபாவில் வழக்கமான அலுவல்கள் இன்று காலை தொடங்கியதும், எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர்.
சபாநாயகர் ஓம் பிர்லா எதிர்க்கட்சி எம்பிக்களை பலமுறை எச்சரித்தார்.அவர், 'அவை நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன. மக்களின் வரிப்பணம் வீணாகிறது. எம்பிக்கள் அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்யக்கூடாது' என்று வலியுறுத்தினார்.
ஆனாலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைத்து ஓம்பிர்லா உத்தரவிட்டார். அதேபோல் ராஜ்யசபாவிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதனால் பார்லிமென்ட் தொடர்ந்து செயல்படாமல் முடங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.