UPDATED : நவ 29, 2024 11:41 AM
ADDED : நவ 28, 2024 11:03 PM

புதுடில்லி: தொழிலதிபர் அதானி விவகாரம், உ.பி.,யின் சம்பல் மற்றும் மணிப்பூர் கலவரம் தொடர்பாக விவாதிக்க கோரி, பார்லிமென்டின் இரு சபைகளிலும் எதிர்க்கட்சிகள் இன்றும் (நவ.29 ) தொடர் அமளியில் ஈடுபட்டதை அடுத்து, சபை நடவடிக்கைகள் 4 வது நாளாக முடங்கின.
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் கூடுவதற்கு சில தினங்களுக்கு முன், அதானி குழுமம் மீது, அமெரிக்க பங்கு சந்தை வாரியம் ஊழல் புகார் கூறியது.
சூரிய மின் உற்பத்தி திட்டத்துக்கான விற்பனை ஒப்பந்தம் பெறுவதற்காக, இந்திய அதிகாரிகளுக்கு 2,200 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் கொடுத்ததை மறைத்து, அமெரிக்காவில் இருந்து முதலீடுகளை பெற்றதாக அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் மீது குற்றஞ்சாட்டியது. இது, இந்திய அரசியலில் பெரும் புயலை கிளப்பியது.
அதேபோல, உ.பி.,யின் சம்பல் மாவட்டத்தில் உள்ள மசூதியில், தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தச் சென்றபோது ஏற்பட்ட வன்முறை கலவரமாக வெடித்தது.
பதவியேற்றனர்
இந்த இரு விவகாரங்கள் குறித்தும் பார்லிமென்டில் விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால், கடந்த இரு தினங்களாக பார்லி., நடவடிக்கைகள் முற்றிலுமாக முடங்கின. இந்நிலையில், குளிர்கால கூட்டத் தொடரின் மூன்றாவது நாள் கூட்டம் நேற்று ((நவ.28) காலை துவங்கியது. லோக்சபா காலை 11:00 மணிக்கு கூடியதும், காங்., -- எம்.பி.,க்கள் பிரியங்கா மற்றும் ரவீந்திர சவான் ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர்.
அதன் பின், வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கான கூட்டுக்குழுவின் பதவிக்காலத்தை, அடுத்த ஆண்டு நடக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரின் இறுதி நாள் வரை நீட்டிக்க ஒப்புதல் வழங்கும் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இதை தொடர்ந்து, அதானி விவகாரம், உ.பி.,யின் சம்பல் மற்றும் மணிப்பூர் கலவரம் தொடர்பாக விவாதிக்க கோரி, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் குரல் எழுப்ப துவங்கினர். இதற்கு, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கண்டனம் தெரிவித்தார்.
''எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, வக்பு திருத்த மசோதா கூட்டுக்குழுவின் பதவிக் காலத்தை நீட்டிக்க ஒப்புக் கொண்டுள்ளோம். அவர்கள் கேட்கும் விவகாரம் தொடர்பாக விவாதிக்கவும் தயாராக உள்ளோம். இருந்தும் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு, சபை நடவடிக்கைகளை முடக்குவது சரியில்லை,'' என்றார்.
சபாநாயகர் இருக்கையில் இருந்த தெலுங்கு தேசம் எம்.பி., கிருஷ்ண பிரசாத் தென்னெட்டி, அமைதி காக்கும்படி கேட்டுக் கொண்டும், உறுப்பினர்கள் தொடர்ந்து கூச்சலிட்டனர். இதை தொடர்ந்து, சபையை நாள் முழுதும் ஒத்திவைத்தார்.
கூச்சலிட்டனர்
ராஜ்யசபாவிலும் இதே கதை தான். காலை 11:00 மணிக்கு சபை கூடிய 10 நிமிடங்களில் ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் 12:00 மணிக்கு சபை கூடியது.
அப்போதும், அதானி, சம்பல், மணிப்பூர் என்ற கோஷங்கள் சபை முழுதும் எதிரொலித்தன. சபை ஒழுங்கை பராமரிக்கவும், கேள்வி நேரத்தை செயல்பட அனுமதிக்கும்படியும் சபை தலைவர் ஜக்தீப் தன்கர் கோரிக்கை விடுத்தார். அதை பொருட்படுத்தாமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கூச்சலிட்டனர்.
இதை தொடர்ந்து ஜக்தீப் தன்கர் கூறியதாவது: நம் அரசியலமைப்பு 100 ஆண்டுகளை எட்டுவதற்கு முன், இறுதி கால் நுாற்றாண்டின் துவக்க நாளில், சபையில் ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்தும் வாய்ப்பை எதிர்க்கட்சிகள் தவற விட்டுள்ளனர். இது வருத்தத்துக்குரியது.
மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கான விவாதம் நடந்திருக்க வேண்டும். அதை நாம் தவற விட்டுவிட்டோம். இது வெறும் விவாதத்துக்கான சபை என்பதை தாண்டி, நம் தேசத்தின் ஆன்மா, அதன் குரலை காண்கிறது. தேசத்தின் தலைவிதி வடிவம் பெறுகிறது.
பார்லிமென்ட் நடவடிக்கையை சீர்குலைப்பது தீர்வாகாது. அது, நம் ஜனநாயகத்தின் அடித்தளத்தையே பலவீனப்படுத்தும் ஒரு நோய்.
இழக்கிறோம்
இந்த புனிதமான சபை விவாதத்தை கோருகிறது; முரண்பாட்டை அல்ல. உரையாடல் தான் தேவையே தவிர இடையூறு அல்ல. ஆக்கப்பூர்வமான விவாதத்தில் இருந்து நாம் விலகிச் செல்லும் போது, கோடிக்கணக்கான மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை இழக்கிறோம்.
எனவே, அர்த்தமுள்ள விவாதம் நடத்த ஒத்துழைப்பு தரும்படி அனைவரையும் வேண்டி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். அப்போதும், எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதை அடுத்து, சபையை நாள் முழுதும் ஒத்தி வைத்தார்.
இன்றும் அமளி தொடர்ந்ததால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. இதனையடுத்து இனி வரும் வாரம் டிச.2 ம் சபை கூடும்