ஓட்டுப்பதிவு நாளில் விளம்பரம் வெளியிட கட்சிகளுக்கு தடை
ஓட்டுப்பதிவு நாளில் விளம்பரம் வெளியிட கட்சிகளுக்கு தடை
ADDED : ஜன 21, 2025 07:20 PM
காஷ்மீர் கேட்:தேர்தல் நாளில் பத்திரிகைகளில் விளம்பரங்களை வெளியிட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது.
டில்லி சட்டசபைக்கு தேர்தல் நடைபெற இன்னும் ஒருசில வாரங்களே உள்ளன. களத்தில் நான்கு அணிகள் இருந்தாலும் மும்முனைப் போட்டி மட்டுமே நிலவுவதாக கருதப்படுகிறது.
எனினும் ஆளும்கட்சியான ஆம் ஆத்மிக்கும் மத்தியில் ஆளும்கட்சியான பா.ஜ.,வுக்கும் மட்டுமே முக்கிய போட்டி இருக்கிறது. இருகட்சிகளும் வாக்காளர்களை கவர அதிரடியாக பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளன.
காங்கிரஸ் கட்சியும், தன் பங்கிற்கு அதிரடி சலுகைகளை அறிவித்து, தேர்தல் களத்தில் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறது.
இந்தநிலையில் அனைத்து அரசியல் கட்சிக்கும் மாநில தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
மாநிலம் அல்லது மாவட்ட அளவிலான ஊடக தணிக்கைக்குழுவிடம் இருந்து ஒப்புதல் பெறாமல் தேர்தல் நாளன்றும் அதற்கு முந்தைய நாளன்றும் பத்திரிகைகளில் விளம்பரங்களை வெளியிடக்கூடாது.
எந்த அரசியல் கட்சியோ அல்லது வேட்பாளரோ அல்லது வேறு எந்த அமைப்போ அல்லது தனிப்பட்ட நபரோ பத்திரிகைகளில் பிரசாரம் செய்யும் வகையில் எந்த விளம்பரத்தையும் வெளியிடக்கூடாது.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.