பறக்கும் பயணிகள் தமிழகத்தில் அதிகரிப்பு; கோவைக்கு முதலிடம்; சென்னைக்கு அடுத்த இடம்!
பறக்கும் பயணிகள் தமிழகத்தில் அதிகரிப்பு; கோவைக்கு முதலிடம்; சென்னைக்கு அடுத்த இடம்!
ADDED : செப் 28, 2024 04:01 PM

சென்னை: விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகள் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்துள்ளது. கடந்தாண்டை காட்டிலும், கோவையில் 6.4 சதவீதம் பேரும், சென்னையில் 5.1 சதவீதம் பேரும் இந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் அதிகரித்துள்ளனர்.
சொகுசான பந்தாவான பயணங்கள் என்றால் எல்லோரும் கைகாட்டுவது வானத்தில் பறக்கும் விமானங்களை தான். குழந்தைகளாகட்டும், பெரியவர்களாகட்டும், வானில் பறப்பது அவர்களுக்கு ஒரு இனிமையான அனுபவம். டிக்கெட் விலை எப்படி இருந்தாலும் வாழ்வில் ஒருமுறையேனும் வானில் விமானத்தில் பறப்பது சிலரின் வாழ்நாள் ஆசையாக கூட இருக்கலாம்.
அப்படி ஒரு மோகமான பயணமான விமான பயணத்தில் பயணிகள் வருகை பதிவில் மற்ற விமான நிலையங்களை காட்டிலும் சென்னை பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இதுதொடர்பான புள்ளி விவரங்களை இந்திய விமான நிலைய ஆணையம் தமது இணையத்தில் வெளியிட்டு உள்ளது.
அதன் விவரம் வருமாறு: இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மட்டும் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த சர்வதேச பயணிகள் எண்ணிக்கை மட்டும் 4,86,117 பேர் ஆகும். உள்ளுர் பயணிகள் எண்ணிக்கை 13,57, 220 பேர். ஒட்டுமொத்தமாக 18,43,337 பேர் சென்னை விமான நிலையம் வந்து சென்றுள்ளனர். இது கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது 5.1% அதிகமாகும்.
சென்னைக்கு அடுத்தபடியாக தமிழகத்தில சர்வதேச விமான நிலையங்களில் கோவை முக்கிய இடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் 2,70,013 பயணிகள் கோவை விமான நிலையத்தை பயன்படுத்தி உள்ளனர். இது கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தை காட்டிலும் 6.4% அதிகமாகும்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் 1,68,668 பயணிகள் வந்து சென்றுள்ளனர். கடந்தாண்டில் இது 1,43,104 பேராக இருந்தது. ஒட்டு மொத்தமாக 17.9 சதவீதம் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள குஷிநகர் விமான நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு பயணி கூட வந்து செல்லவில்லை. இதுவே கடந்தாண்டு ஆகஸ்டில் 1,832 பயணிகள் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தனியார் பங்களிப்புடன் கூட்டு அடிப்படையில் செயல்படும் விமான நிலையங்களில் புதுடில்லி விமான நிலையத்தில் 63,92,435 பயணிகள் வந்து சென்றுள்ளனர். அடுத்தபடியாக மும்பை விமான நிலையத்தை 44,57,347 பயணிகள் பயன்படுத்தி உள்ளனர். பெங்களூரு விமான நிலையத்துக்கு 33,90,189 பேரும், ஹைதராபாத் விமான நிலையத்துக்கு 23,29,653 பேரும் வந்து சென்றுள்ளனர்.