ADDED : மே 12, 2025 12:55 AM
ஆமதாபாத்: குஜராத்தின் நவ்சாரி பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளியின் முதல்வர் அர்ஜுன் ரதோட், 54; வீட்டில் இருந்தபோது, நாற்காலியில் இருந்து கீழே விழுந்து காயம் அடைந்தார்.
எலும்பு முறிவு ஏற்பட்ட அவருக்கு நவ்சாரி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தீவிர கண்காணிப்பு பிரிவில் இருந்த அவருக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டது.
இதனால், ரதோடின் ரத்த அழுத்தம் குறைந்து அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக மருத்துவமனை மீது ரதோடின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், டாக்டர் அலட்சியமாக செயல்பட்டு அளவுக்கு அதிகமாக மயக்க மருந்து செலுத்தியதால், அவர் உயிரிழந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மருத்துவமனையின் மயக்க மருந்து நிபுணர் டாக்டர் பரத் நாயக், செவிலியர் நிராலி நாயகா, மருத்துவமனை மேலாளர் இமேஷ் காந்தி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.