ADDED : டிச 17, 2024 10:16 PM

பெங்களூரு; சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி, 33, என்ற ரசிகரை கொலை செய்த வழக்கில், நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரா உட்பட, 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே ஐந்து பேருக்கு ஜாமின் கிடைத்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு தர்ஷன், பவித்ரா உட்பட மேலும் ஏழு பேருக்கு உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
இந்நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து நேற்று காலை பவித்ரா வெளியே வந்தார். அவரது தாய், சகோதரர் காரில் அழைத்துச் சென்றனர்.
கனகபுரா ரோட்டில் உள்ள தல்கட்டாபூர் வஜ்ர முனீஸ்வரா கோவிலுக்கு சென்றார். அங்கு தனது பெயருக்கும், தர்ஷன் பெயருக்கும் சிறப்பு அர்ச்சனை மற்றும் பூஜை செய்தார். பின், பனசங்கரியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார்.
பவித்ராவும், தர்ஷனும் சிறையில் இருந்தபோது ஒருமுறை கூட சந்தித்துக் கொள்ளவில்லை. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த உறவு முறிந்து விட்டதாக சொல்லப்பட்டது.
தற்போது தர்ஷன் பெயரில் பூஜை செய்திருப்பதன் மூலம், தர்ஷன் உடனான தனது உறவு இன்னும் முடியவில்லை என்பதை பவித்ரா சூசகமாக வெளிப்படுத்திஉள்ளார்.