கணினியில் ‘வாட்ஸாப்’ கணக்கை பயன்படுத்தும் போது கூடுதல் கவனம்: மத்திய அரசு எச்சரிக்கை
கணினியில் ‘வாட்ஸாப்’ கணக்கை பயன்படுத்தும் போது கூடுதல் கவனம்: மத்திய அரசு எச்சரிக்கை
UPDATED : நவ 23, 2026 08:46 PM
ADDED : நவ 23, 2026 08:46 PM
– சிறப்பு நிருபர் –
‘கணினியில் இணைக்கப்படும், ‘வாட்ஸாப்’ கணக்கை அலுவலகங்கள் மற்றும் பொது கணினிகளில் பயன்படுத்திய பின் செயலியில் இருந்து வெளியேறாமல் விட்டால், கணக்கை மோசடி நபர்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர வாய்ப்புள்ளது’ என மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைய குற்றங்கள் தடுப்பு ஒருங்கிணைப்பு மையம் எச்சரித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைய பாதுகாப்பு பிரிவாக, ‘ஐ4சி’ எனப்படும், இணைய குற்றங்கள் தடுப்பு ஒருங்கிணைப்பு மையம் செயல்படுகிறது. இதன் கீழ் இயங்கும் தேசிய இணைய குற்ற அச்சுறுத்தல்கள் ஆய்வு பிரிவு, கணினியில், ‘வாட்ஸாப்’ பயன்படுத்துவோருக்கு வழிகாட்டல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் கூறியுள்ளதாவது:
‘வாட்ஸாப் வெப்’ கணக்கை அலுவலகம், நூலகம் போன்ற பொது இடங்களில் உள்ள கணினிகளில் பயன்படுத்தும் போது கூடுதல் கவனம் தேவை. இல்லையெனில் பிறர் அங்கீகாரமின்றி செயலியில் இடம்பெற்றுள்ள தனிப்பட்ட குறுஞ்செய்திகள், தொடர்பு எண்கள், குழு உரையாடல்களைப் பார்க்க முடியும். பயனாளர் பெயரில் தகவல்களை அனுப்பி, பண மோசடி உள்ளிட்ட குற்றங்களிலும் ஈடுபட வாய்ப்புள்ளது.
எனவே அரசு, அலுவலக ரகசியம், நிதி சார்ந்த முக்கிய தகவல்களை ‘வாட்ஸாப்’ வழியாக பகிர வேண்டாம். அலுவலகம், பொது இடங்கள், பிறர் பயன்படுத்தும் கணினிகளில் கணக்கை இணைப்பதை தவிர்க்கவும். அவசியம் எனில், பயன்படுத்தி முடித்ததும் கணக்கிலிருந்து வெளியேற வேண்டும்.
கணினி இயங்குதளம், பிரவுசர், பாதுகாப்பு மென்பொருட்களை புதுப்பித்த நிலையில் வைத்திருக்கவும். சந்தேகத்திற்குரிய கோப்புகள், செயலிகளைப் பயன்படுத்த வேண்டாம்.
கணக்கில் இருந்து அனுமதியின்றி தகவல்கள் அனுப்பப்படுவது உள்ளிட்ட சந்தேகத்திற்குரிய செயல்பாடுகள், ‘வாட்ஸாப் செட்டிங்ஸ்’ பகுதிக்கு சென்று ‘லிங்க்ட் டிவைஸ்’ என்ற இணைக்கப்பட்ட சாதனங்கள் பகுதிக்குச் சென்று, உங்களுக்குத் தெரியாத சாதனம் இணைக்கப்பட்டிருந்தால் அதைத் தேர்ந்தெடுத்து ‘லாக் அவுட்’ செய்யவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
