சபரிமலை பூஜைகளில் பாயாசம் பானகம் அப்பம் பஞ்சாமிர்தம்
சபரிமலை பூஜைகளில் பாயாசம் பானகம் அப்பம் பஞ்சாமிர்தம்
ADDED : டிச 02, 2025 01:07 AM

சபரிமலை: சபரிமலையில் நடைபெறும் பூஜைகளின் போது ஐயப்பனுக்கு அரவணை மட்டுமல்லாமல் இரு வகை பாயாசம் நைவேத்யம் செய்யப்படுகிறது. அதிகாலையில் எட்டு வகை பொருள்களால் செய்யப்பட்ட பஞ்சாமிர்தம் அபிஷேகத்துக்கு பின் விற்பனை செய்யப்படுகிறது.
தினமும் காலை 7:30 மணிக்கு உஷ பூஜை நடைபெறும் போது ஐயப்பனுக்கு பாயாசம் நைவேத்யம் செய்யப்படும். இது இடித்துப்பிழிந்து பாயாசம் என்று அழைக்கப்படுகிறது. தேங்காய் துருவலை இடித்து அதிலிருந்து ஒன்றாம் பால், இரண்டாம் பால் என்று எடுத்து சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் சேர்த்து இந்த பாயாசம் தயாரிக்கப்படுகிறது.
மதியம் உச்ச பூஜையில் அரவணை நைவேத்யம் செய்யப்படும். இரவு 9:15 மணிக்கு நடைபெறும் அத்தாழ பூஜையின் போது எள் பாயாசம் நைவேத்யம் செய்யப்படுகிறது. எள், சர்க்கரை, தேங்காய் போன்ற பொருட்கள் பயன்படுத்தி இந்த பாயசம் தயாரிக்கப்படுகிறது. இந்த பூஜையின் போது மருத்துவ குணம் கொண்ட பானகம் மற்றும் அப்பம், அடை போன்றவையும் நைவேத்யம் செய்யப்படுகிறது. எல்லா பூஜைகளின் போதும் வெள்ளைச்சோறு நைவேத்யம் உண்டு.
அதிகாலையில் ஐயப்பனுக்கு பஞ்சாமிர்தம் அபிஷேகம் செய்யப்படுகிறது. கற்கண்டு, சர்க்கரை, கதளிப்பழம், உலர்திராட்சை, நெய், தேன், ஏலக்காய் பொடி, சுக்கு பொடி ஆகிய எட்டு பொருள்கள் சேர்த்து பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுகிறது.
ஐயப்பனுக்கு நைவேத்யம் செய்யப்படும் பொருட்களில் அரவணை மற்றும் பஞ்சாமிர்தம் மட்டுமே தேவசம் கவுண்டர்களில் காலை நேரங்களில் விற்பனை செய்யப்படுகிறது. அரவணை டின்னின் நேர் பாதி அளவுள்ள டின்களில் கிடைக்கும். இதன் விலை ரூ.125.

