ADDED : பிப் 11, 2024 12:01 AM

பெங்களூரு : கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாத அமைச்சர் ராமலிங்கரெட்டிக்கு எதிராக 'பிடிவாரன்ட்' பிறப்பித்து, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கர்நாடகாவில் பா.ஜ., ஆட்சியில் இருந்தபோது, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதில் அணை கட்ட வலியுறுத்தி, மேகதாது சங்கமாவில் இருந்து பெங்களூரு வரை, 2022ல் காங்கிரசார் பாதயாத்திரை நடத்துவதாக அறிவித்தனர். அந்த நேரத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால், பாதயாத்திரை நடத்த, அப்போதைய பா.ஜ., அரசு தடை விதித்தது.
தடையை மீறி பாதயாத்திரை நடத்தியதாக, சித்தராமையா, சிவகுமார், ராமலிங்கரெட்டி உள்ளிட்டோர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவானது. இந்த வழக்குகள் விசாரணை, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு ராமலிங்கரெட்டி ஆஜராகாமல் இருந்தார். நேற்று நடந்த விசாரணையின் போதும் ஆஜராகவில்லை.
இதையடுத்து ஜாமினில் வெளியே வர முடியாத வகையில், அவருக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்து, நீதிபதி ஜே.பிரீத் உத்தரவிட்டார்.

