கூட்டுறவு தயாரிப்புக்கு வரி விலக்கு அமித் ஷாவிடம் பெரியகருப்பன் மனு
கூட்டுறவு தயாரிப்புக்கு வரி விலக்கு அமித் ஷாவிடம் பெரியகருப்பன் மனு
ADDED : நவ 26, 2024 02:06 AM

சென்னை: கூட்டுறவு சங்கங்களின் தயாரிப்பு மற்றும் சேவைகளுக்கு, ஜி.எஸ்.டி., வரியில் இருந்து விலக்கு அளிப்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை, டில்லியில் நேற்று, மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம், தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷாவை, தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன், டில்லியில் நேற்று சந்தித்தார். தமிழக கூட்டுறவுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் ஆகியோர் உடன் இருந்தனர்.
அப்போது, அமித் ஷாவிடம் அளித்த மனு:
கூட்டுறவு சங்கங்களுக்கு வருமான வரி பிடித்தங்களில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும். 'நபார்டு' வங்கி அளிக்கும் சலுகையும், மறு நிதியளிப்பும், மாநிலத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் ஒட்டுமொத்த குறுகிய கால கடன் அளவிற்கு ஏற்ப வழங்கப்பட வேண்டும்.
ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சி திட்டங்கள் வாயிலாக, நியாயமான வட்டி விகிதத்தில், கூட்டுறவு சங்கங்களுக்கு கடன் வழங்க வேண்டும்.
கூட்டுறவு சங்கங்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கு, ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையங்களின் உட்கட்டமைப்பை சீரமைக்க, இந்திய தேசிய கூட்டுறவு ஒன்றியத்திற்கு அனுப்பப்பட்ட, 124 கோடி ரூபாயை வழங்க வேண்டும்.
கடன்களை சொந்த நிதியில் இருந்து வழங்கும் கூட்டுறவு வங்கிகளுக்கு, முன்பு போலவே 2 சதவீதம் வட்டி மானியம், மத்திய அரசால் வழங்கப்பட வேண்டும். வருமான வரித் துறையால் முடக்கப்பட்ட தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களின் கணக்குகள் விடுவிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.