நாட்டின் பொருளாதாரத்தை அழிக்க முயற்சிக்கிறார்: ராகுல் மீது துணை ஜனாதிபதி மறைமுக சாடல்
நாட்டின் பொருளாதாரத்தை அழிக்க முயற்சிக்கிறார்: ராகுல் மீது துணை ஜனாதிபதி மறைமுக சாடல்
ADDED : ஆக 16, 2024 04:44 PM

புதுடில்லி: '' அரசியலமைப்பு பதவியில் இருப்பவர் நாட்டின் பொருளாதாரத்தை அழிக்க முயற்சி செய்கிறார்'', என எதிர்க்கட்சி தலைவர் ராகுலை மறைமுகமாக துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் விமர்சித்து உள்ளார்.
அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டதாகவும், அது குறித்து விசாரிக்க வேண்டிய செபி அமைப்பின் தலைவர் மற்றும் அவரது கணவரும், அக்குழுமத்தின் பங்குகளை வாங்கியதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கூறியது. இது குறித்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் ராகுல், '' இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும்'' எனக்கூறி இருந்தார்.
இந்நிலையில், தேசிய சட்டப்பல்கலை மாணவர்கள் மத்தியில் ஜக்தீப் தன்கர் பேசியதாவது: இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் வெளியிடப்பட்ட அறிக்கை குறித்து உச்சநீதிமன்றம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என அரசியல் அமைப்பு பதவியில் உள்ள ஒருவர் கூறினார். இது எனக்கு மிகுந்த கவலை அளிக்கிறது.
நாட்டின் மீது சுயநலன்களையும்,பாகுபாட்டையும் நிறுவும் சக்திகளை இளைஞர்கள் அடையாளம் கண்டு, அதனை நடுநிலையாக்க வேண்டும். நாம் அதனை அனுமதிக்க முடியாது.
சட்டசபையாக இருந்தாலும், நிர்வாகத்துறையாக இருந்தாலும், நீதித்துறையாக இருந்தாலும் ஒரு நிறுவனத்தின் அதிகார வரம்பை இந்திய அரசியலமைப்பு வரையறுத்து உள்ளது. அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உச்சநீதிமன்றங்களுக்கு அதிகார வரம்பு வரையறுக்கப்பட்டு உள்ளது. அங்கு, நீதிமன்றமே தாமாக முன்வந்து வழக்கு தொடரும் வாய்ப்பு உண்டா? அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளதை தாண்டி ஒரு தீர்வு வழங்கப்பட்டு உள்ளதா? இவ்வாறு ஜக்தீப் தன்கர் கூறினார்.

