ஸ்ரீசன் இருமல் மருந்து நிறுவனத்தில் 5 முறை ஆய்வு; சொல்கிறார் அமைச்சர்!
ஸ்ரீசன் இருமல் மருந்து நிறுவனத்தில் 5 முறை ஆய்வு; சொல்கிறார் அமைச்சர்!
ADDED : அக் 17, 2025 12:36 PM

சென்னை: சட்டசபையில் இருமல் மருந்து விவகாரம் தொடர்பாக அதிமுகவின் கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார். குறிப்பிட்ட அந்த நிறுவனத்தில் 5 முறை ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிப் இருமல் மருந்து குடித்து மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் 25 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து, சட்டசபையில் அதிமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். இதற்கு விளக்கம் அளித்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
கோல்ட்ரிப் இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்ட 2011ம் ஆண்டில் இருந்து ஒருமுறை கூட மத்திய மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஆய்வு செய்யவில்லை. 2019 முதல் 2022ம் ஆண்டு வரை 5 முறை மாநில அரசின் மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஆய்வு செய்து அபராதமும், உற்பத்தி நிறுத்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.
எனினும், கடந்த ஆண்டில் உரிய ஆய்வுகள் மேற்கொள்ளாததால் 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். உரிய விதிமுறைகளை பின்பற்றி ஸ்ரீசன் பார்மசிட்டிகல் நிறுவனத்தின் மருந்து தயாரிக்கும் உரிமங்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு அந்நிறுவனம் மூடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அமைந்துள்ள இதர மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மீது விரிவான ஆய்வு மேற்கொள்ள ஆணைகள் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாநிலத்தில் உள்ள 397 மருந்து உற்பத்தி நிறுவனங்களில், திரவ நிலை மருந்து (சிரப்) தயாரிக்கும் 50 மருந்து நிறுவனங்களில் கடந்த ஒரு வாரத்தில் முழுஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த வாரத்தில் மேலும் 52 மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மீது முழுஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இனி வரும் காலங்களில் மருந்து உற்பத்தியாளர்களை தொடர்ந்து கண்காணிக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.