பொன் மாணிக்கவேலுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ததை எதிர்த்து மனு
பொன் மாணிக்கவேலுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ததை எதிர்த்து மனு
ADDED : அக் 08, 2025 03:55 AM

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐ.ஜி., பொன் மாணிக்கவேலுக்கு எதிரான வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.
தமிழக சிலை கடத்தல் வழக்குகளில் குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்பட்டதாக கூறி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி.,யாக இருந்த காதர் பாட்ஷா மீது, முன்னாள் ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் வழக்கு பதிவு செய்தார்.
தன்னை பழி வாங்கும் நோக்கில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டதாக காதர் பாட்ஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த புகார் மீது விசாரணை நடத்த சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டது.
இது தொடர்பாக பொன் மாணிக்கவேல் மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்ததோடு, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது. சி.பி.ஐ.,யின் குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி பொன் மாணிக்கவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி யாக மனுதாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 'வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லை' எனக் கூறி, சி.பி.ஐ., தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்ததுடன், பொன் மாணிக்கவேலுக்கு எதிரான வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக முன்னாள் டி.எஸ்.பி., காதர் பாட்ஷா, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.
இந்நிலையில், 'இந்த வழக்கில் என்னுடைய தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது' என, பொன் மாணிக்கவேல் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தனியாக கேவியட் மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.
- டில்லி சிறப்பு நிருபர் -