ADDED : ஜன 23, 2025 01:28 AM

புதுடில்லி, தேர்தல் பத்திரங்கள் வாயிலாக, கட்சிகள் பெற்ற நன்கொடைகளை பறிமுதல் செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை நிராகரித்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கட்சிகளுக்கு நன்கொடைகள் வழங்கும் தேர்தல் பத்திரங்கள் முறை, 2018ல் அறிமுகம் செய்யப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்தாண்டு பிப்., 15ல் அளித்த உத்தரவில், அது செல்லாது என்று குறிப்பிட்டது.
இதைத் தொடர்ந்து, தேர்தல் பத்திரங்கள் வாயிலாக கட்சிகள் பெற்ற, 16,518 கோடி ரூபாயை பறிமுதல் செய்ய உத்தரவிடக் கோரி, கேம் சிங் பட்டி என்பவர் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவற்றை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்தாண்டு, ஆக., 2ல், தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி, தற்போது சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
தேர்தல் பத்திரங்கள் முறை செல்லாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அவ்வாறு செல்லாது என்ற நிலையில், அதன் வாயிலாக பெறப்பட்ட நன்கொடைகளை அரசியல் கட்சிகளிடம் இருந்து பறிமுதல் செய்ய வேண்டும்.
அதனால், பறிமுதல் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். எங்களுடைய மனுக்களை மீண்டும் முதலில் இருந்து விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.