பிரபல நிறுவன மருந்து, மாத்திரைகளில் போலி; ஆணையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
பிரபல நிறுவன மருந்து, மாத்திரைகளில் போலி; ஆணையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
ADDED : செப் 25, 2024 09:02 PM

சென்னை: பாராசிட்டமால் உள்ளிட்ட 53 முன்னணி மருந்து மற்றும் மாத்திரைகள் தரம் தொடர்பான சோதனையில் வெற்றி பெறாத நிலையில், போலி மருந்துகளால் தங்களுக்கு அவப்பெயர் ஏற்படுவதாக முன்னணி நிறுவனங்கள் வேதனை தெரிவித்துள்ளன.
மருந்துகளின் தரம் குறித்து மருத்துவ துறை அதிகாரிகளால் மாதாந்திர சோதனை நடத்தப்பட்டது. அதில், மக்கள் அதிகம் பயன்படுத்தும் பாராசிட்டமால் உள்பட 53 மருந்துகள் தரமில்லாமல் இருந்ததாக மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் தெரிய வந்துள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வைட்டமின் சி மற்றும் டி3 மாத்திரைகள் ஷெல்கால், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி ஷாப்ட்ஜெல்ஸ், ஆன்டியாசிட் பான்-டி, பாராசிட்டம்மல் ஐ.பி., 500 எம்.ஜி., ஆன்டி- டையபெட்டிக் மருந்தான கிளிம்பிரைடு, உயர் ரத்த அழுத்தத்திற்கான மருந்து டெல்மிஷார்டன் உள்ளிட்ட 53 முன்னணி மருந்துகள் தரம் தொடர்பான ஆய்வில் தோல்வியடைந்துள்ளன.
இந்த மருந்துகள் அனைத்தும், ஹெட்டரோ டிரக்ஸ், ஆல்கெம் லெபாரட்டரீஸ், ஹிந்துஸ்தான் ஆன்டிபயோடிக்ஸ் லிமிடெட், கர்நாடகா ஆன்டிபயோடிக்ஸ் & பார்மாசியூட்டிகல்ஸ் லிமிடெட் உள்ளிட்ட பிரபல நிறுவனங்கள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றன.
குறிப்பாக, ஷெல்கால் மாத்திரிக்கைகள், உத்தரகாண்ட்டைச் சேர்ந்த ப்யூர் & க்யூர் ஹெல்த்கேர் நிறுவனம் தயாரித்து டோரன்ட் பார்மாசியூட்டிகல்ஸ் நிறுவனத்தின் மூலம் விநியோகம் செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளும் பரிசோதனையில் தோல்வியையே சந்தித்தன. கர்நாடகாவைச் சேர்ந்த ஆன்டி பயோடிக்ஸ் & பார்மாசியூட்டிகல்ஸ் தயாரிப்புகளான பாராசிட்டமால் மாத்திரைகளும் கூட தர பரிசோதனையில் வெற்றி பெறவில்லை.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவ நிறுவனங்களிடம் கேள்வி எழுப்பிய போது, 'அவை போலியான மாத்திரைகள்' என்றும், 'தங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகள் அல்ல' என்றும் கூறுகின்றனர். இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, மக்கள் மத்தியில் நன்மதிப்புடன் செயல்பட்டு வரும் தங்களைப் போன்ற நிறுவனங்களுக்கு, இதுபோன்ற போலி மருந்து, மாத்திரைகளின் மூலமாக அவப்பெயர் ஏற்படுவதாக மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் வேதனை தெரிவித்துள்ளன. மேலும், போலி மருந்துகளை தயாரித்து விற்பவர்களை அடையாளம் கண்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.
கடந்த ஆகஸ்ட் மாதம் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் மருந்து எனக் கூறி, 156 மருந்துகளை இந்திய சந்தைகளில் விற்க மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.