மக்கள் தொகை 2ம் கட்ட கணக்கெடுப்பு டில்லியில் மாவட்ட அளவில் பயிற்சி
மக்கள் தொகை 2ம் கட்ட கணக்கெடுப்பு டில்லியில் மாவட்ட அளவில் பயிற்சி
UPDATED : அக் 29, 2026 10:33 PM
ADDED : அக் 29, 2026 10:29 PM
புதுடில்லி: மக்கள் தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டத்திற்கான பணிகளுக்கு முன்னதாக, டில்லியில் மாவட்ட அளவிலான பயிற்சி தொடங்கியுள்ளது.
நாட்டின், 2027 ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு, இரண்டு கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்டப் பணிகள் துவங்க உள்ளன. இது தொடர்பாக, டில்லி தலைமை செயலாளர் ராஜிவ் வர்மா தலைமையில், அக்., 13ல் மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், இரண்டாவது கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக உத்தேச அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு அதிகாரிகள், அலுவல்கள் மற்றும் பணியாளர்களை தயார் செய்யும் முன்னேற்பாடுகள் தொடங்கியுள்ளன. இது தொடர்பாக, டில்லி வடகிழக்கு மாவட்டத்தில் இரண்டு நாள் பயிற்சி முகாம் நடந்தது.
குறிப்பாக கணக்கெடுப்பு பணிக்காக களப்பணியாளர்களை தயார் படுத்தும் வகையில், அந்தந்த மாவட்ட நிர்வாககங்கள் கால அட்டவணைகளை தயாரித்து வருகின்றன.
புதுடில்லி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கு பின், களப்பணியாளர்களுக்கான பயிற்சியை தொடங்கி திட்டமிடப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட கணக்கெடுக்கும் பணியின் போது, வீடுகளிலிருந்து தகவல்களைச் சேகரிப்பு மேற்கொள்ளப்படும். களப்பணியாளர்களை அவர்களின் பணிகளுக்குத் தயார்படுத்துவது மற்றும் கணக்கெடுப்பு நடைமுறைகளை அவர்கள் நன்கு புரிந்துகொள்வதை உறுதி செய்வது உள்ளிட்ட ஒருங்கிணைப்புப் பணிகளை மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன.
டில்லியில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டம், ஜன., 10-ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளது.
இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட பின், 15 நாள் அவகாசத்தில், குடியிருப்பாளர்கள் தங்கள் குடும்ப விவரங்களை இணையவழியில் சமர்ப்பிக்கலாம். அதனைத் தொடர்ந்து, இந்த முறையைப் பயன்படுத்தாதவர்களின் வீடுகளுக்கு, கணக்கெடுப்பாளர்கள் நேரில் சென்று, தகவல்களைச் சேகரிப்பதுடன், விவரங்களையும் சரிபார்ப்பர். இந்த பணிகள், ஜன., 25 முதல் பிப்., 28 வரை நடைபெறும்.
இருப்பினும், இந்தத் தேதிகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
