தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் புகைப்படம் வெளியானது! முஸ்லிம் அல்லாதோரை குறிவைத்து தாக்கிய கொடூரம்
தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் புகைப்படம் வெளியானது! முஸ்லிம் அல்லாதோரை குறிவைத்து தாக்கிய கொடூரம்
ADDED : ஏப் 24, 2025 03:04 AM

பஹல்காம்: ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணியரை குறிவைத்து தாக்கிய சம்பவத்தில், சந்தேகத்திற்குரிய நான்கு பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் மற்றும் ஓவியங்களை பாதுகாப்பு படையினர் வெளியிட்டுள்ளனர். அவர்கள், முஸ்லிம் அல்லாதோரை குறிவைத்து கொடூரமாக கொலை செய்தது தெரியவந்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நேற்று முன்தினம் சுற்றுலா பயணியர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பைசரன் புல்வெளியில் குடும்பத்தினருடன் விடுமுறையை கழிக்க வந்த அப்பாவி பயணியர், 26 பேர் இந்த தாக்குதலில் உயிரிழந்தனர்.
மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ஆறு பேர், குஜராத் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த தலா மூன்று பேர் இந்த கொடூர சம்பவத்தில் பலியாகினர். உத்தரகண்ட், ஹரியானா, உத்தர பிரதேசம், பீஹார், பஞ்சாப், கேரளா, ஒடிசா, ஆந்திரா, மத்திய பிரதேசம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த தலா ஒருவர் இந்த தாக்குதலில் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
அதேசமயம், உள்ளூரைச் சேர்ந்த நபர் ஒருவரும், நம் அண்டை நாடான நேபாளத்தைச் சேர்ந்த ஒருவரும் பலியாகி உள்ளனர்.
இறந்தவர்களில், ஹரியானாவின் கர்னாலைச் சேர்ந்த கடற்படை அதிகாரி லெப்டினன்ட் வினய் நர்வால் என்பவரும் ஒருவர். இவருக்கு நான்கு நாட்களுக்கு முன் திருமணம் நடந்த நிலையில், மனைவியுடன் தேனிலவுக்கு வந்த போது, இந்த சோகம் நேர்ந்துள்ளது. மனைவியின் கண்ணெதிரிலேயே, வினய் சுட்டுக்கொல்லப்பட்டார்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மத்திய புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த மனீஷ் ரஞ்சன், விமானப் படை அதிகாரி டேஜ் ஹைல்யாங், அமெரிக்காவில் பணிபுரியும் தகவல் தொழில்நுட்ப அதிகாரி பிதன் உள்ளிட்டோர் பலியானோரில் அடங்குவர்.
பயங்கரவாதிகள் குறிப்பாக ஆண்களை மட்டுமே குறி வைத்து கொன்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். அதேபோல், ஒவ்வொருவரையும் ஹிந்துவா, முஸ்லிமா எனக் கேட்டு, ஹிந்துக்கள் என்றதும் கேள்வி எதுவும் கேட்காமல் கொடூரமாக சுட்டுக் கொன்றதாக உயிர் தப்பியவர்கள் தெரிவித்தனர்.
கான்பூரைச் சேர்ந்த சுபம் திவேதி பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், சம்பவம் குறித்து அவரது மனைவி கூறுகையில், “நானும், என் கணவரும் பூங்கா அருகே உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது, அங்கு வந்த இரு நபர்கள், என் கணவரிடம் ஹிந்துவா, முஸ்லிமா என கேட்டனர்.
ஹிந்து எனக் கூறியதும், இஸ்லாமிய நம்பிக்கை பிரகடனமான கல்மாவை ஓதச் சொல்லி கூறினர். பின்னர், அவரைச் சுட்டுக் கொன்று விட்டு, இது குறித்து பிரதமரிடமும், இந்திய அரசிடமும் போய் சொல் என என்னிடம் கூறிவிட்டு அவர்கள் சென்றனர்,” என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கவும், சொந்த ஊர் எடுத்துச் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அண்டை நாடான நேபாளத்தை சேர்ந்த மருத்துவ மாணவரான சுதிப்பின் உடலும் காத்மாண்டு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த தாக்குதல் குறித்து உளவுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து செயல்படும், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான, லஷ்கர் - இ - தொய்பாவின் உள்ளூர் கிளையான, 'தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட்' அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர்.
அடர்ந்த பைன் காட்டில் பதுங்கியிருந்த ஐந்துக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள், ராணுவ சீருடை, குர்தா - பைஜாமா உடை அணிந்து வந்து, அப்பாவி மக்களை சுட்டுக்கொன்று விட்டு தப்பி ஓடி விட்டனர்.
சமீபத்தில் பைசரன் பள்ளத்தாக்கில் ஊடுருவிய பாக்., பயங்கரவாதிகளும், இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். லஷ்கர் - -இ- - தொய்பாவின் உயர்மட்ட தளபதி காலித் என்கிற சைபுல்லா கசூரி, இந்த தாக்குலுக்கு மூளையாக செயல்பட்டுள்ளார்.
உடல் கேமராக்கள் மற்றும் ஹெல்மெட் பொருத்தப்பட்ட கேமராக்களை அணிந்து, தாக்குதலின் முழு நிகழ்வுகளையும் பயங்கரவாதிகள் பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்கள், ராணுவ தர ஆயுதங்களை தாக்குதலுக்கு பயன்படுத்தி உள்ளனர்.
தாக்குதலுக்கு முன்னதாக, உள்ளூர் நபர்களின் உதவியுடன், பைசரன் பள்ளத்தாக்கு பகுதியை பயங்கரவாதிகள் வேவு பார்த்துள்ளனர். சரியாக திட்டமிட்டு, பாதுகாப்பு படையினர் இல்லாத நேரம் பார்த்து, இந்த தாக்குதலை அவர்கள் அரங்கேற்றி உள்ளனர்.
பயங்கரவாதிகளில் இருவர், உள்ளூரைச் சேர்ந்த ஆதில், ஆசிப் என்பது தெரிய வந்துள்ளது. தப்பியோடிய பயங்கரவாதிகளை பிடிக்கும் பணி முழு வீச்சில் நடக்கிறது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.