ADDED : நவ 26, 2024 06:10 PM

பத்தனம்திட்டா: சபரிமலை 18 படிகளில் போலீசார் எடுத்த படங்கள் சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து, ஐகோர்ட் கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
இச்சம்பவம் குறித்து சபரிமலை சன்னிதானத்தின் சிறப்பு அதிகாரி பைஜூ அளித்த புகாரின் பேரில், ஏ.டி.ஜி.பி., ஸ்ரீஜித் விரிவான அறிக்கை கேட்டுள்ளார். போட்டோஷூட்டுக்கு வி.ஹெச்.பி.,கேரள பிரிவு அமைப்பும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த கேரளா ஐகோர்ட் நீதிபதிகள் கூறியதாவது:
சன்னிதானத்தில் பணிக்கு வந்த போலீசார் திரும்பும் முன் போட்டோ எடுத்துக்கொண்டுள்ளனர். சபரிமலை 18ம் படியில் இதுபோன்ற சம்பவங்களை எந்த வகையிலும் ஏற்க முடியாது.
சன்னிதானத்தில் போலீஸ் அதிகாரிகளின் பணி பாராட்டுக்குரியது. இருப்பினும், இத்தகைய நடவடிக்கைகள் அனுமதிக்கப்படக்கூடாது.
சன்னிதானத்தில் மொபைல் போன் பயன்படுத்த கட்டுப்பாடு தேவை. சன்னிதானம் அனுமதி இல்லாமல் போட்டோ, வீடியோ எடுக்க அனுமதிக்க கூடாது என்பதை தெளிவாக பக்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.