இண்டிகோ விமானத்தின் உள்ளே பறந்த புறா; புரியாமல் திகைத்த பயணிகள்
இண்டிகோ விமானத்தின் உள்ளே பறந்த புறா; புரியாமல் திகைத்த பயணிகள்
UPDATED : டிச 08, 2025 08:52 PM
ADDED : டிச 08, 2025 08:49 PM

பெங்களூரு: இண்டிகோ விமானத்தினுள் புறா ஒன்று பறந்த சம்பவம், பயணிகள் மத்தியில் அதிர்ச்சியையும், திகைப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
விமானிகளுக்கான புதிய நேர கட்டுப்பாட்டு விதிகள் காரணமாக ஒரு வாரத்திற்கும் மேலாக இண்டிகோ நிறுவனம் கடும் சிக்கலில் உள்ளது. விமானிகள் இல்லாததன் காரணமாக நாடு முழுவதும் அதன் சேவைகள் முடங்கின. நாள்தோறும் ஆயிரக்கணக்கான விமானங்களின் சேவைகள் ரத்தானது.
போதிய விமானிகள் இல்லாதது, தொடர்ச்சியாக விமான சேவைகள் ரத்து, மத்திய அரசின் நடவடிக்கை என கடும் சிக்கலில் இருக்கும் இண்டிகோ நிறுவனத்திற்கு மேலும் ஒரு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. விமான பயணத்தின் போது, உள்ளே புறா ஒன்று அங்கும், இங்கும் பறந்தோடி பயணிகளை பீதிக்கு ஆளாக்கி இருக்கும் சம்பவம் அரங்கேறி உள்ளது.
பெங்களூருவில் இருந்து வதோதராவுக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் தான் இந்த புறா பறந்து விளையாடிய சம்பவம் நடந்திருக்கிறது. விமானம் புறப்பட தயார் நிலையில் இருந்த சமயத்தில் எங்கிருந்தோ பறந்து வந்த புறா ஒன்று விமானத்திற்குள் நுழைந்து இருக்கிறது.
புறாவை பிடிக்க விமான சிப்பந்திகள் முயல, போக்கு காட்டிய புறா உள்ளேயே அங்கும், இங்கும் பறந்து, பறந்து அதகளம் செய்திருக்கிறது. இதை கண்ட பயணிகள் எல்லோரும் திகைத்து போய் இருக்க, அவர்களில் ஒருவர் இந்த காட்சியை தமது செல்போனில் வீடியோவாக பதிவேற்றி போதாத குறைக்கு சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கிறார்.
சமூக வலைதளங்களில் வைரலான இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து, பல்வேறு கருத்துகளையும், விமர்சனங்களையும் பதிவிட்டு வருகின்றனர். எதிர்பாராத விருந்தாளி விமானத்திற்குள் வந்துவிட்டார், இண்டிகோ நிறுவனம் எப்படி இந்த கூடுதல் எடைக்கு(புறா) கட்டணம் வசூலிக்கும், இந்த இண்டிகோவுக்கு என்னதான் ஆனது? இதற்கு மட்டுமே ஏன் இப்படி நடக்கிறது? என்ற அனுசரனையான கருத்துகளும் வந்து விழுந்திருக்கின்றன.

