துபாய் 'ஏர் ஷோ'வில் 'தேஜஸ்' விமானம் வெடித்து சிதறியதில் விமானி பலி
துபாய் 'ஏர் ஷோ'வில் 'தேஜஸ்' விமானம் வெடித்து சிதறியதில் விமானி பலி
ADDED : நவ 22, 2025 12:43 AM

துபாய்: துபாயில் நடந்த சர்வதேச விமான கண்காட்சியின் இறுதி நாளான நேற்று, சாகசத்தில் ஈடுபட்ட நம் நாட்டின், 'தேஜஸ் மார்க் - 1' போர் விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி வெடித்து சிதறியது. இதில் விமானி உயிரிழந்தார்.
மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இரண்டு ஆண்டு களுக்கு ஒருமுறை சர்வதேச விமான கண்காட்சி நடைபெறும். இந்த ஆண்டுக்கான கண்காட்சி கடந்த 17ம் துவங்கி, நேற்று வரை ஐந்து நாட்கள் நடந்தது.
சாகசம் விமானம், விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்களுக்கான மிகப்பெரிய கண்காட்சி இது. 1,500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், 1.50 லட்சம் துறை சார்ந்த பார்வையாளர்கள் இதில் பங்கேற்றனர்.
கண்காட்சியின் இறுதி நாளான நேற்று, பொது மக்களும் அனுமதிக்கப்பட்டனர்.
வானில் பல்வேறு போர் விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்டன. இந்திய விமானப் படை சார்பில், 'தேஜஸ் மார்க் - 1' போர் விமானம் பங்கேற்றது.
இதற்காக கோவை சூலுாரில் உள்ள விமானப் படை தளத்தில் இருந்து அந்த விமானம் கொண்டு செல்லப்பட்டது.
இதை, நம் விமான படையைச் சேர்ந்த விங் கமாண்டர் நமன் சியால் இயக்கினார். அல் மக்துாம் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட தேஜஸ் விமானம், வானில் சாகசத்தை துவங்கிய சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டை இழந்து, வேகமாக தரையில் மோதி பெரும் தீப்பிழம்புடன் வெடித்தது.
இதன் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவின. இதில், விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குறைவான உயரத்தில் கிட்டத்தட்ட செங்குத்தான நிலையில் கீழ் நோக்கி வந்து, மீண்டும் மேலே எழும்ப முயன்ற போது விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
விசாரிக்க குழு உயிரிழந்த விமானியின் குடும்பத்துக்கு பக்கபலமாக இருப்போம் என முப்படை களின் தலைமை தளபதி அனில் சவுகான் அறிக்கை வெளியிட்டுள்ளார். விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க குழு அமைத்துள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
'தேஜஸ் மார்க் - 1' விமானம், கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள, 'ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் மற்றும் ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் ஏஜென்சி'யால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது.
நான்காம் தலைமுறை போர் விமானமான இது, 2016ல் விமானப் படை யில் இணைக்கப்பட்டது.

