ஜார்க்கண்ட், மே.வங்கத்தில் ரூ.10 கோடி ரொக்கம் பறிமுதல்
ஜார்க்கண்ட், மே.வங்கத்தில் ரூ.10 கோடி ரொக்கம் பறிமுதல்
ADDED : நவ 22, 2025 12:37 AM
ராஞ்சி: நிலக்கரி திருட்டு மற்றும் கடத்தல் தொடர்பான பணமோசடி வழக்கில், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில், 40க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்திய அமலாக்கத் துறையினர், 10 கோடி ரூபாய் ரொக்கம், தங்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
நிலக்கரி திருட்டு மற்றும் கடத்தல் தொடர்பான பணமோசடி வழக்கில், மேற்கு வங்கத்தின் துர்காபூர், புருலியா, ஹவுரா, கொல்கட்டா உள்ளிட்ட மாவட்டங்களில், 24க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று காலை 6:00 மணி முதல் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
நரேந்திர கார்கா, யுதிஸ்டர் கோஷ், கிருஷ்ணா முராரி கயால், சின்மயி மோண்டல், ராஜ்கிஷோர் யாதவ் உள்ளிட்டோருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் இந்த சோதனை நடந்தது.
அப்போது, 8 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப் பட்டது. மேலும் சில முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
இதே போல், ஜார்க்கண்டில் 18 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடந்தது. அனில் கோயல், சஞ்சய் உத்யோக், எல்.பி.சிங், அமர் மண்டல் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில், 2.2 கோடி ரூபாய் ரொக்கம், 120 நிலப் பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக சம்பந்தப்பட்டோரிடம் அமலாக்கத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

