கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீருக்கு எதிரான குற்றவியல் வழக்கை ரத்து செய்தது ஐகோர்ட்
கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீருக்கு எதிரான குற்றவியல் வழக்கை ரத்து செய்தது ஐகோர்ட்
ADDED : நவ 22, 2025 12:37 AM

புதுடில்லி: கொரோனா பெருந் தொற்று காலத்தின் போது, சட்டவிரோதமாக மருந்துகளை வினியோ கம் செய்ததாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அறக் கட்டளை மற்றும் அதன் நிர்வாகிகள் மீது தொடரப்பட்ட குற்றவியல் வழக்கை, டில்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பவர் கவுதம் கம்பீர், 44. இவர், கடந்த 2020ம் ஆண்டு கிழக்கு டில்லி பா.ஜ., - எம்.பி.,யாக இருந்தபோது, கொரோனா தொற்று பரவல் தீவிரமாக இருந்தது.
அப்போது இவரது அறக்கட்டளை சார்பில், 'பேபி ப்ளூ' என்ற மாத்திரையை ஆயிரக்கணக்கில் கொள்முதல் செய்யப்பட்டு, இலவச மருத்துவ முகாம்கள் மூலம் வினியோகிக்கப்பட்டது.
இந்த மாத்திரைக்கு தட்டுப்பாடு நிலவியபோது கம்பீருக்கு மட்டும் எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, மாத்திரை கொள்முதல் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வழங்கும்படி மருந்து கட்டுப்பாட்டு கழகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து கவுதம் கம்பீர் நடத்தும் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக இயக்குநர் அபராஜிதா சிங், அதன் அறங்காவலர்களாக உள்ள கம்பீரின் தாய் சீமா மற்றும் அவரது மனைவி நடாஷா ஆகியோர் மீது டில்லி அரசு புகார் அளித்தது.
இதையடுத்து, அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பப்பட்டது. இப்புகாரின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.
இதற்கிடையே அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த சம்மனை எதிர்த்தும், குற்றவியல் புகாரை ரத்து செய்யக்கோரியும் டில்லி உயர் நீதிமன்றத்தில் கம்பீர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா, கம்பீரின் அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு எதிரான குற்றவியல் புகாரை ரத்து செய்து நேற்று உத்தரவிட்டார்.

