ஜூப்ளி ஹில்ஸ் இடைத்தேர்தல் வெற்றி: தெலுங்கானா முதல்வருக்கு புது தெம்பு
ஜூப்ளி ஹில்ஸ் இடைத்தேர்தல் வெற்றி: தெலுங்கானா முதல்வருக்கு புது தெம்பு
ADDED : நவ 22, 2025 12:36 AM

: தெலுங்கானாவில், ஜூப்ளி ஹில்ஸ் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரசின் வெற்றி, முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு கூடுதல் பலத்தையும், அங்கீகாரத்தையும் அளித்துள்ளது.
தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது.
இம்மாநில தலைநகர் ஹைதராபாதில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த பாரத் ராஷ்ட்ர சமிதியின் மாகந்தி கோபிநாத் உயிரிழந்ததை அடுத்து, சமீபத்தில் அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது.
அரசியல் பலம் இதில், ஆளும் காங்., சார்பில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நவீன் யா தவ்; பாரத் ராஷ்ட்ர சமிதி சார்பில் உயிரிழந்த மாகந்தி கோபிநாத்தின் மனைவி சுனிதா; பா.ஜ., சார்பில் தீபக் ரெட்டி ஆகியோர் போட்டியிட்டனர்.
'முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு பாடம் புகட்டும் வகையில், ஜூப்ளி ஹில்ஸ் இடைத்தேர்தல் முடிவுகள் இருக்கும்' என, பாரத் ராஷ்ட்ர சமிதி செயல் தலைவர் கே.டி.ராமா ராவ் சூளுரைத்தார்.
இந்த சவாலை ஏற்ற முதல்வர் ரேவந்த் ரெட்டி, தன் ஒட்டுமொத்த அரசியல் பலத்தையும் பயன்படுத்தினார்.
அந்த வகையில், இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஒட்டுமொத்த அமைச்சர்கள், முக்கிய எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகளை களமிறக்கினார். தனிப்பட்ட முறையில், வேட்பாளர் நவீன் யாதவை விட, முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு இந்த இடைத்தேர்தல் மிகவும் அவசியம்.
காரணம், தன் செல்வாக்கை கட்சி மேலிடத்துக்கு நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருந்தார்.
முஸ்லிம்கள் அதிகமுள்ள ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என திட்டமிட்ட முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஓட்டுப்பதிவுக்கு சில நாட்களுக்கு முன், அந்த சமூகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், காங்., தலைவருமான முகமது அசாருதீனை அமைச்சரவையில் சேர்த்து முஸ்லிம்களை கவனம் ஈர்த்தார்.
அவரது இந்த அதிரடி நடவடிக்கைகளுக்கு இடைத்தேர்தலில் நல்ல பலன் கிடைத்தது. 25,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் காங்., வேட்பாளர் நவீன் யாதவ் வெற்றி பெற்றார்.
அங்கீகாரம் பாரத் ராஷ்ட்ர சமிதி வசமிருந்த ஜூப்ளி ஹில்ஸ் தொகுதி காங்., கைக்கு வந்து விட்டது.
பீஹார் சட்டசபை தேர்தலில் காங்., படுதோல்வி அடைந்த நிலையில், ஜூப்ளி ஹில்ஸ் இடைத்தேர்தல் வெற்றி அக்கட்சி மேலிடத்துக்கு ஒருவித நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வெற்றியானது, முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு அரசியல் ரீதியாக கூடுதல் பலத்தை அளித்துள்ளதுடன், அங்கீகாரத்தையும் கொடுத்துள்ளது.
காங். , டில்லி மேலிடத்தின், 'குட் புக்'கில் இடம் பெற்றுள்ள அவர், தேர்தல் தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுக்கும் கட்சியின் உயர்மட்ட குழுவிலும் விரைவில் சேர்க்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
- நமது சிறப்பு நிருபர் -

