விமானத்தை இயக்க மறுத்த பைலட்: 45 நிமிடம் காத்திருந்த துணை முதல்வர்
விமானத்தை இயக்க மறுத்த பைலட்: 45 நிமிடம் காத்திருந்த துணை முதல்வர்
ADDED : ஜூன் 08, 2025 01:06 AM

மும்பை: மஹாராஷ்டிராவின் ஜால்கனில் இருந்து மும்பைக்கு, அம்மாநில துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே செல்ல முயன்றபோது, பணி நேரம் முடிந்ததால் விமானத்தை இயக்க முடியாது என பைலட் தெரிவித்ததால், 45 நிமிடங்கள் வரை விமான நிலையத்திலேயே அவர் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராக உள்ளார்.
இவர், மும்பையில் இருந்து மஹாராஷ்டிராவின் ஜால்கனுக்கு நேற்று முன்தினம் மாலை 3:45 மணிக்கு தனி விமானத்தில் புறப்பட்டு சென்றார். எனினும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இரண்டரை மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டது.
ஜால்கனில் நடந்த நிகழ்ச்சியில் ஏக்நாத் ஷிண்டே பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் அவருடன் அமைச்சர்கள் கிரிஷ் மஹாஜன், குலாப்ராவ் பாட்டீல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதன்பின் மீண்டும் மும்பை செல்ல, ஜால்கன் விமான நிலையத்திற்கு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இரவு 9:15 மணிக்கு வந்தார்.
அப்போது அவர் செல்ல இருந்த விமானத்தின் பைலட், விமானத்தை இயக்க மறுத்தார். தன் பணி நேரம் முடிந்துவிட்டதாகவும், மீண்டும் விமானத்தை இயக்க, உயரதிகாரிகளின் அனுமதி தேவை என்றும் அவர் தெரிவித்தார்.
இதுதவிர, தொடர்ந்து 12 மணி நேரத்திற்கும் மேலாக விமானம் ஓட்டியதால், உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து, டாக்டர் வரவழைக்கப்பட்டு பைலட்டின் உடல்நிலை பரிசோதிக்கப்பட்டது. இதில், சில மருத்துவஉதவிகள் அவருக்கு அளிக்கப்பட்டது.
இதற்கிடையே, விமானத்தை மீண்டும் இயக்க உயர் அதிகாரிகள் அவருக்கு அனுமதி அளித்தனர்.
இதைத்தொடர்ந்து திட்டமிட்ட நேரத்தை விட, 45 நிமிடங்கள் தாமதமாக அந்த விமானத்தில் ஏக்நாத் ஷிண்டே புறப்பட்டு சென்றார்.