தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/தாக்குதலின்போது அனுமான் மந்திரம் சொன்னேன்: பிரதமர் மோடியிடம் விமானி ஸ்மிட் பேச்சு

தாக்குதலின்போது அனுமான் மந்திரம் சொன்னேன்: பிரதமர் மோடியிடம் விமானி ஸ்மிட் பேச்சு

தாக்குதலின்போது அனுமான் மந்திரம் சொன்னேன்: பிரதமர் மோடியிடம் விமானி ஸ்மிட் பேச்சு

1


UPDATED : அக் 03, 2026 12:00 AM

ADDED : அக் 02, 2026 09:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2026 12:00 AM ADDED : அக் 02, 2026 09:26 PM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: விமான தாக்குதலில் காயமடைந்த இந்திய விமானி ஸ்மிட் மச்சாருடன் பிரதமர் மோடி, ‘வீடியோ’ அழைப்பு மூலம் நேற்று பேசி நலம் விசாரித்தார். அப்போது, ‘தாக்குதல் நடந்தபோது, தைரியத்தை வரவழைக்க, அனுமான் மந்திரம் சொன்னேன்’ என, பிரதமரிடம் விமானி கூறினார்.

மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகருக்கு, ‘பிளைதுபாய்’ விமானம் கடந்த 30ம் தேதி சென்றது. மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த விமானி ஸ்மிட் மச்சார், விமானத்தை இயக்கினார். 34,000 அடி உயரத்தில் விமானம் பறந்தபோது, ஸ்மிட் மச்சாரை ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி, கத்தியால் குத்தினார்.

சமயோசிதமாக செயல்பட்ட ஸ்மிட், ‘காக்பிட்’ அறை கதவை திறந்துவிட்டார். விமான பணியாளர்கள் மற்றும் பயணியர் விரைந்து வந்து, அவரை காப்பாற்றினர். விமானத்தில் பயணித்த வேறு விமானி வாயிலாக, விமானம் சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதனால், விமானத்தில் இருந்த 170க்கும் மேற்பட்டோர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

காயமடைந்த இந்திய விமானி ஸ்மிட், ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம், பிரதமர் மோடி நேற்று வீடியோ கால் மூலம் பேசினார். அப்போது இருவரும் பேசியதாவது:

மோடி: ஸ்மிட் வணக்கம், எப்படி இருக்கிறீர்கள்? உடல்நிலை இப்போது எப்படி உள்ளது?

ஸ்மிட்: வணக்கம் சார், எல்லாம் நன்றாக இருக்கிறது.

மோடி: உங்களுக்காக, நாடு முழுதும் மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். பல இடங்களில் மகாமிருத்யுஞ்சய மந்திரம் வாசிக்கப்படுகிறது. உங்களுடைய தைரியம், பொறுமை, சமயோசிதமான முடிவு எடுக்கும் திறன் ஆகியவற்றால், சில நொடிகளில் முக்கியமான முடிவுகளை எடுத்து பலருடைய உயிரைக் காப்பாற்றியுள்ளீர்கள்.

இந்தியர்கள் உயிரை பறிப்பவர்கள் அல்ல; மாறாக, பிறரைக் காப்பாற்ற தங்கள் உயிரையும் பணயம் வைக்க துணிந்தவர்கள் என்று ஒட்டுமொத்த நாடும் இன்று பெருமையுடன் சொல்ல முடியும். உங்கள் உடலில் மிகப்பெரிய காயம் ஏற்பட்ட போதும், உயிரைப் பற்றி கவலைப்படாமல், விமானத்தில் இருந்த பயணியரின் உயிரைக் காப்பாற்ற நீங்கள் சிந்தித்துள்ளீர்கள்.

இதன் மூலம், 140 கோடி இந்தியர்களின் பெருமையை உயர்த்தி உள்ளீர்கள். உங்கள் பெற்றோர் மற்றும் மனைவியிடம் பேசினேன். பகவத் கீதையின் நல்ல போதனைகளை உங்களுக்கு கூறி, அருமையான முறையில் தாய் கீதா உங்களை வளர்த்துள்ளார்.

ஸ்மிட்: நான் விரும்பும் மிகப்பெரிய மனிதர் நீங்கள். நீங்களே என்னை தொலைபேசியில் அழைத்து பாராட்டி பேசுவது எனக்கு பெருமையாக உள்ளது. தாக்குதல் நடந்தபோது, என் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நான் போராடினேன். ஒரு கட்டத்தில் கீழே விழுந்துவிட்டேன். உடலில் காயங்கள் ஏற்பட்டன. கடந்த 17 ஆண்டுகளாக விமானத்தை ஓட்டி வருகிறேன். 11 ஆண்டுகளாக கேப்டனாக இருக்கிறேன்.

கண்களை மூடி இருந்தாலும், விமானத்தில் என்ன நடக்கிறது என்பதை என்னால் உணர முடியும். நான் கீழே விழுந்திருந்தபோது, விமானம் தாழ்வாக கீழ்நோக்கி பறப்பதை உணர்ந்தேன். முடிந்தளவு முயன்று காக்பிட் அறையின் கதவை திறந்தேன். நான் என் உயிரைக் காப்பாற்ற முயன்றாலும், பயணியர் யாரும் உயிரிழக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.

நான் எப்போதும் இக்கட்டான தருணத்தில், அனுமான் மந்திரத்தை உச்சரிப்பேன். தாக்குதல் நடந்தபோதும், அதையே செய்தேன். கடவுள்தான் என்னை காப்பாற்றினார். மன்னிக்கவும் சார்... உங்கள் முன்பு நான் அழுகிறேன்-.

மோடி: ஸ்மிட், என்னிடம் நீங்கள் உணர்ச்சிவசப்படாமல் வேறு எங்கே நீங்கள் உணர்ச்சிவசப்படுவீர்கள்? நீங்கள் செய்திருப்பது மிகப்பெரிய சாதனை. இந்திய மக்கள் மட்டுமல்ல, உலகம் முழுதும் உள்ள மக்களும் உங்களைப் பார்க்கவும், பேசவும் ஆர்வமாக உள்ளனர்.

ஸ்மிட்: நான் தினமும் பூஜை செய்யும்போது, என் 2 வயது மகன், என் மடியில் அமர்ந்து அனுமான் மந்திரத்தை கேட்பான். நாங்கள், நாட்டைவிட்டு தொலைவில் இருந்தாலும், நம் கலாச்சாரத்தை விட்டு விலக கூடாது என்பதை குழந்தைகளுக்கு கற்று தருகிறேன்.

மோடி: உண்மைதான், நீங்கள் நாட்டைவிட்டு தூரம் இருந்தாலும், இங்குள்ள மக்கள் உங்களுக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர். நீங்கள் விரைவில் குணமடைவீர்கள். இந்தியா உங்களை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறது.

உங்களுக்கு எப்போது உதவி தேவைப்பட்டாலும், என்னை தொலைபேசியில் நீங்கள் தொடர்பு கொள்ளலாம். நாம் நேரில் சந்திக்கும் போது, விமான தாக்குதல் குறித்து விரிவாக பேசலாம்.

ஸ்மிட் : நன்றி சார்.

இவ்வாறு இருவரும் பேசினர்.

ஸ்மிட் மச்சாரின் பூர்வீகம் குஜராத் என்பதால், அவருடன் குஜராத்தி மொழியிலும் பிரதமர் சிறிது நேரம் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us