UPDATED : ஜூன் 14, 2025 12:55 AM
ADDED : ஜூன் 14, 2025 12:52 AM

ஆமதாபாத்: ஆமதாபாதில், 'ஏர் - இந்தியா' விமானம் விபத்துக்குள்ளான நிலையில், அதுபோல் வடிவமைக்கப்பட்ட விளம்பரம் ஒன்று, அன்றைய நாளிதழில் வெளியானது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
குஜராத்தின் ஆமதாபாதில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், பி.ஜே., மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மீது விழுந்து நொறுங்கி விபத்துக்குஉள்ளானது.
இந்நிலையில், மும்பை, குஜராத்தில் இருந்து வெளியாகும், 'மிட் டே' நாளிதழின் முதல் பக்கத்தில், விளம்பரம் ஒன்று நேற்று முன்தினம் காலை வெளியானது.
அதிர்ச்சி
அதில், 'கிட்ஜானியா' என்ற நிறுவனம், தந்தையர் தினத்தை ஒட்டி, இந்த விளம்பரத்தை வெளியிட்டிருந்தது. குழந்தைகளுக்கான திறமையை வளர்க்க மூன்று நாட்கள் நடத்தப்படும் நிகழ்ச்சியில், பொறியாளர்கள், விமானிகள், டாக்டர்கள் போன்ற தொழில்துறை வல்லுனர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததை விளக்கும் விதமாக, அந்த முதல் பக்க விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது.
அதில், 'ஏர் - இந்தியா' விமானம் ஒன்று கட்டடத்தின் உள்ளே இருந்து வெளியேறுவது போல் காட்சியும் வடிவமைக்கப்பட்டு இருந்தது. விளம்பரம் வெளியான அடுத்த சில மணி நேரங்களில், அதேபோன்று விபத்து நடந்தது அனைவரின் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் நடந்த விபத்தில் சிக்கிய, 'ஏர் - இந்தியா' விமானம், மருத்துவக் கல்லுாரி கட்டடத்தை இடித்தபடி வெளியேறியிருந்த நிலையில், அதே போன்ற படம் விளம்பரத்தில் இடம்பெற்றிருந்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
'கிட்ஜானியா' நிறுவன விளம்பரத்தையும், விமான விபத்து குறித்த படத்தையும் வெளியிட்டு, சமூக வலைதளங்களில் ஏராளமானோர், 'தந்தையர் தினம் தொடர்பான விளம்பரத்தில், 'ஏர் - இந்தியா' விமானம் ஏன் பயன்படுத்தப்பட வேண்டும்?
இது தற்செயலாக நடந்ததா? விமான விபத்து முன்பே திட்டமிடப்பட்டதா? விபத்து குறித்த முன்னெச்சரிக்கையா?' என, பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், 'ஏர் - இந்தியா' நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், அந்த நிறுவனத்தின் பெயரும், விமானமும் விளம்பரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக, 'கிட்ஜானியா' விளக்கமளித்து உள்ளது.
அறிக்கை
இது குறித்து, 'கிட்ஜானியா' வெளியிட்டுள்ள அறிக்கை:
நாளிதழில் வெளியிடப்பட்ட விளம்பரத்தில் உள்ள விமானப் படம், உலகெங்கிலும் உள்ள எங்கள் மையங்களில் பயன்படுத்தப்படுகிறது.
'ஏர் - இந்தியா' உட்பட பல்வேறு விமான நிறுவனங்களுடன் இணைந்து எங்களால் உருவாக்கப்பட்ட விமான அகாடமியை இந்த படம் குறிக்கிறது.
கோடைக்கால பிரசாரத்தின் ஒரு பகுதியாக, இந்த விளம்பரம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டது. விபத்துக்கும், அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறோம். உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினரின் உணர்வுகளை புரிந்து கொண்டு, அவர்களின் துயரில் பங்கு கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.